``ஆந்திரச் சிறையில் வாடும் பழங்குடியின இளைஞர்கள்; கண்டுகொள்ளாத தமிழக அரசு” - டில்லிபாபு காட்டம் | Tribal youths in jail in the name of enquiry, says former MLA

வெளியிடப்பட்ட நேரம்: 08:00 (25/04/2019)

கடைசி தொடர்பு:08:00 (25/04/2019)

``ஆந்திரச் சிறையில் வாடும் பழங்குடியின இளைஞர்கள்; கண்டுகொள்ளாத தமிழக அரசு” - டில்லிபாபு காட்டம்

``ஊர் பெயரைக் கேட்டு, விசாரணை என்ற பெயரில் கைதுசெய்யப்பட்ட தமிழகப் பழங்குடியின இளைஞர்கள் 2,347 பேர், கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக ஆந்திரச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆனால், அவர்களை மீட்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என முன்னாள் எம்.எல்.ஏ டில்லிபாபு தெரிவித்தார்.

பழங்குடி

தமுஎகச சார்பில் நுகத்தடி என்ற நாவல் வெளியீட்டு விழா விருதுநகரில் நடைபெற்றது. தமுஎகச மாநில கௌரவத் தலைவர் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் அந்த நூலை வெளியிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநிலத் தலைவருமான டில்லிபாபு பெற்றுக்கொண்டார்.

அப்போது அவர், ``சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகியும்கூட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை என்பதைத்தான் பொன்பரப்பி சம்பவம் நமக்கு எடுத்துக்காட்டுகிறது. ஆந்திராவில் கூலி வேலை மற்றும் திருப்பதி கோயிலுக்குச் சென்ற பழங்குடியினத்தைச் சேர்ந்த தமிழக இளைஞர்கள் 2,347 பேர், விசாரணைக் கைதிகளாகக் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக திருப்பதி, கடப்பா சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இதனை தமிழக அரசும் கண்டுகொள்ளவில்லை. சில குறிப்பிட்ட சாதி மக்களை குற்றவாளிகளாகச் சித்தரிப்பது தவறு. வாச்சாத்தி வழக்கில் பெண்களைப் பாலியல் கொடுமை செய்தது யார்? காவலர்களும் வனத்துறையினரும்தானே.

டில்லிபாபு

தருமபுரி செங்கொடிபுரத்தில், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலிருந்து 54 சென்ட் நிலத்தில் குடியிருந்து வரும் 56 குடும்பங்களைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இதுவரை பட்டா கிடைக்கவில்லை. பலகட்ட போராட்டம் நடத்தியும் அரசு கண்டுகொள்ளவில்லை. தமிழ்நாட்டில் வேட்டைக்காரர் சாதியினர் சுமார் ஒன்றரை லட்சம் பேர் வசித்துவருகின்றனர். 1956-ம் ஆண்டு வரை பழங்குடியினர் சான்றிதழ் பெற்றுவந்த இவர்களுக்கு, தற்போது தாழ்த்தப்பட்டோர் சாதிச் சான்றிதழ் வழங்கப்பட்டுவருகிறது. இந்தத் தகவலை முதலமைச்சருக்குக் கொண்டுசென்றோம். அவருக்கு இந்தச் சமூகம்குறித்த புரிதல் எதுவும் இல்லை. ஆனால், பாண்டிச்சேரியில் உள்ள வேட்டைக்காரன் சாதியினருக்கு பழங்குடியினர் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, இவர்கள்குறித்து சமூக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” என்றார்.

ச.தமிழ்ச்செல்வன்

எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் பேசும்போது, ``ஒடுக்கப்பட்ட சமூகம், கல்வியறிவு பெற்று வரலாற்றைத் தேட வேண்டும். எழுத்தாளர்கள் நிறைய படிக்க வேண்டும். தேட வேண்டும். சமூகத்தை ஆய்வுசெய்து எழுத வேண்டும்” என்றார்.


அதிகம் படித்தவை