தம்பியை சுட்டுக்கொன்றது ஏன்? - கேரளாவில் கைதான பில்லா ஜெகன் அதிர்ச்சி வாக்குமூலம்! | Why I killed the brother says billa jagan

வெளியிடப்பட்ட நேரம்: 10:25 (25/04/2019)

கடைசி தொடர்பு:10:25 (25/04/2019)

தம்பியை சுட்டுக்கொன்றது ஏன்? - கேரளாவில் கைதான பில்லா ஜெகன் அதிர்ச்சி வாக்குமூலம்!

``நான் ஆரம்பிச்சு நடத்திட்டுவந்த லாரி செட்டை அவன் பேருக்கு எழுதிக் கேட்டதால், துப்பாக்கியால் சுட்டேன்” என தம்பியைக் கொன்ற வழக்கில் கைதான பில்லாஜெகன் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பில்லா ஜெகன்

தூத்துக்குடி சின்ன கடைத்தெருவைச் சேர்ந்தவர் பில்லாஜெகன். தூத்துக்குடி மாவட்ட விஜய் ரசிகர் மன்றத் தலைவராகவும், தி.மு.க தெற்குமாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளராகவும் உள்ளார். இவர், தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளரும் திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏ-வுமான அனிதா ராதாகிருஷ்ணனின் தீவிர ஆதரவாளர். இவருக்கு ரவி, சுமன், சிமன்சன் என மூன்று தம்பிகள். அண்ணன் பில்லா ஜெகனுடன் தம்பிகள் லாரி டிரான்ஸ்போர்ட் தொழிலைக் கவனித்துவருகின்றனர். பில்லாஜெகனுக்கும் அவரது கடைசித் தம்பியான சிமன்சனுக்கும் இடையே சிலமாதங்களாக சொத்துப் பிரச்னை இருந்துவந்தது.

இந்நிலையில், கடந்த 22-ம் தேதி நள்ளிரவில் மீண்டும் சொத்துப் பிரச்னையால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், பில்லாஜெகன் துப்பாக்கியால் சிமன்சனின் தொடைப்பகுதியில் சுட்டார். இதில், அதிகமாக ரத்தம் வெளியேறியதால், சிமன்சன் உயிரிழந்தார். பில்லாஜெகன் தலைமறைவானார். இந்தச் சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையில், பில்லாஜெகனை கேரளாவில் போலீஸார் கைதுசெய்து தூத்துக்குடிக்கு அழைத்துவந்தனர்.

கைது

போலீஸாரிடம் பில்லாஜெகன் அளித்த வாக்குமூலத்தில், “நாங்க அண்ணன் தம்பி மொத்தம் நாலு பேரு. லாரி செட் உள்ளிட்ட தொழில்களை நடத்திட்டு வர்றோம். நான் அரசியலில் இருப்பதால் அதிக பணம் செலவானதால், கடன்சுமை அதிகமாயிட்டு. சொத்தை பிரிச்சுத் தரணும்னு தம்பிகள் தொடர்ந்து என்னிடம் கேட்டுக்கிட்டே இருந்தாங்க. இதில், லாரிசெட்டை என்னோட பேருக்கு எழுதிக்கொடுன்னு கடைசித் தம்பி சிமன்சன் கேட்டுக்கிட்டே இருந்தான். நான் ஆரம்பிச்சு நடத்திட்டு வர்ற லாரிசெட்டை அவன் கேட்டதால் எனக்கு கோபம் வந்துச்சு.

இந்த நிலையிலதான், 22-ந் தேதி இரவுல திரும்பவும் லாரி செட்டை எழுதிக்கொடுன்னு கேட்டு அதைப்பத்தியே பேசுனான். ரெண்டு பேருக்கும் வாக்குவாதம் அதிகமாச்சு. இதுல கோபமடைஞ்சு, நான் வச்சிருந்த துப்பக்கியால அவனோட தொடையில சுட்டேன். அதுல அதிகமான ரத்தம் கசிந்ததுல இறந்துட்டான். உடனே, என்னோட நண்பர்களுடன் காரில் கேரளாவுக்குப் போனேன். அங்கு, வாகனச் சோதனையில் போலீஸார் கைதுசெஞ்சுட்டாங்க” என்று சொல்லியுள்ளார்.

இந்தக் கொலை வழக்கு தொடர்பாக பில்லா ஜெகன், அவரது நண்பர் ரெங்கநாத கண்ணன், கார் டிரைவர் மணிகண்டன், வல்லநாட்டைச் சேர்ந்த பண்டாரம், செங்கோட்டையைச் சேர்ந்த முத்துப்பாண்டி ஆகியோரைக் கைதுசெய்துள்ளனர். அவர்கள் வைத்திருந்த கள்ளத்துப்பாக்கி, கார் ஆகியவற்றையும் வடபாகம் போலீஸார் பறிமுதல்செய்தனர். கைதுசெய்யப்பட்ட பில்லாஜெகன் உள்ளிட்ட 5 பேரும் தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டதன்பேரில், அவர்கள் அனைவரும் பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டனர். பில்லாஜெகனின் வாக்குமூலத்தில் கூறப்பட்டுள்ளபடி, அவருக்கு கள்ளத்துப்பாக்கி கொடுத்தவரை கண்டுபிடிக்கும் பணியில் 2 தனிப்படை போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

  

    

நீங்க எப்படி பீல் பண்றீங்க


அதிகம் படித்தவை