பூச்சிமருந்து கலந்த நீரைக் குடித்த பசுக்கள் உயிரிழப்பு!- தண்ணீர் தாகத்தால் நடந்த சோகம் | cows died accidentally when drinks medicines mixed water

வெளியிடப்பட்ட நேரம்: 11:25 (25/04/2019)

கடைசி தொடர்பு:11:25 (25/04/2019)

பூச்சிமருந்து கலந்த நீரைக் குடித்த பசுக்கள் உயிரிழப்பு!- தண்ணீர் தாகத்தால் நடந்த சோகம்

 திருவாடானை அருகே, பருத்திச்செடிக்குத் தெளிப்பதற்காக வைத்திருந்த மருந்து கலந்த நீரைப் பருகியதால், 4 பசுக்கள் பரிதாபமாக உயிரிழந்தன.

பூச்சி மருந்து கலந்த நீரை பருகியதால் பலியான பசுக்கள்
 

திருவாடானை அருகே, ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவுக்கு உட்பட்ட ஆட்டாங்குடி ஊராட்சி, குன்றத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வீரபாண்டி, கருப்பூர்  கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம், குணங்குளம் கிராமத்தைச் சேர்ந்த மலையரசி, பஞ்சு ஆகியோர், சொந்தமாக பசுமாடுகளை வளர்த்துவந்தனர். இந்தப் பசுக்களை வழக்கம்போல வயல் காட்டிற்கு மேய்ச்சலுக்காக  ஓட்டிச்  சென்றிருந்தனர்.

இந்நிலையில், குணங்குளம் கிராமத்தைச் சேர்ந்த நாகரத்தினம் என்பவர், தனது வயலில் பயிரிட்டிருந்த பருத்திச்செடிகளில் பூச்சி தாக்காமல் இருக்க தெளிப்பதற்காக, பூச்சிமருந்தை பாத்திரம் ஒன்றில் தண்ணீரில் கலந்து வைத்துள்ளார். அப்போது, அப்பகுதியில் மேய்ச்சலுக்குச் சென்ற மாடுகள், கடும் வெயிலின் காரணமாக ஏற்பட்ட தாகத்தைத் தீர்க்க,  அந்த மருந்து கலந்த தண்ணீரை எதிர்பாராதவிதமாகக் குடித்துவிட்டது.

மருந்து கலந்த தண்ணீரைக் குடித்த 4 பசுமாடுகளும், சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தன. பசு மாடுகள் சுருண்டு விழுந்ததைக் கண்ட அவற்றின் உரிமையாளர்கள், கதறியபடி  ஓடிவந்து பார்த்தனர். ஆனால், அதற்குள் 4 பசுக்களும் உயிரிழந்துவிட்டன. ஒரே நேரத்தில் 4 பசுக்களும் இறந்ததுகுறித்து ஆய்வுசெய்தபோதுதான், அவை பூச்சிமருந்து கலந்த நீரைப் பருகியது தெரியவந்தது.   மாட்டின் உரிமையாளர்கள், இதுகுறித்து காவல் துறைக்குத் தகவல் கொடுத்தனர்.  பசுக்களுக்கு நேர்ந்த இந்தக் கோர நிகழ்வுகுறித்து   திருப்பாலைக்குடி  போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.