`ஆண் குழந்தை ரூ.4 லட்சம்; பெண் குழந்தை ரூ.3 லட்சம்!'- நர்ஸின் 30 ஆண்டுக்கால கடத்தல் அம்பலம் | Namakkal nurse arrested in baby theft case

வெளியிடப்பட்ட நேரம்: 12:06 (25/04/2019)

கடைசி தொடர்பு:12:06 (25/04/2019)

`ஆண் குழந்தை ரூ.4 லட்சம்; பெண் குழந்தை ரூ.3 லட்சம்!'- நர்ஸின் 30 ஆண்டுக்கால கடத்தல் அம்பலம்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்தவர், செவிலியர் அமுதா. விருப்ப ஓய்வுபெற்ற அமுதா, 30 வருடங்களாக இடைத்தரகராகச் செயல்பட்டு, குழந்தைகளை வாங்கியும் விற்றும்வருகிறார். கடந்த 30 வருடங்களாக ராசிபுரத்தில் இதனை மேற்கொண்டுவருகிறார் என்று குற்றம் சாட்டுகின்றனர். பல்வேறு தொண்டு நிறுவனங்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு, குழந்தைகள் இருப்பதை அவர்கள்மூலம் அறிந்து, குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு விற்றுவந்ததாகக் கூறப்படுகிறது.

குழந்தை

இவர், சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த குழந்தை இல்லாத ஒருவரிடம் பேசுவதாக ஒரு ஆடியோ வைரலாகிவருகிறது. அதில், 'குழந்தைகளின் கலர், எடை ஆகியவைதான் அதன் விலையை நிர்ணயிக்கின்றன. ஆண் குழந்தை என்றால் குறைந்தபட்சம் ரூ.4 லட்சம் வரையிலும், பெண் குழந்தை என்றால் ரூ.3 லட்சம் வரையிலும் விற்கப்படும். அதுமட்டுமின்றி, ரூ. 70 ஆயிரம் கொடுத்தால், ராசிபுரம் நகராட்சியில் குழந்தைக்கு பிறப்புச் சான்றிதழும் வாங்கித் தரப்படும்' என்று பேசுவதாக உள்ளது. இந்த ஆடியோ வெளியாகியுள்ள நிலையில், ஓய்வுபெற்ற நர்ஸ் அமுதாவிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதுகுறித்து போலீஸாரிடம் கேட்டபோது, 'இதில்  ஒரு பெரிய கும்பலே செயல்பட்டுவருகிறது. குழந்தை விற்பனை செய்யும் இந்தக் கும்பல், குறிப்பாக வெளி மாநிலங்களில் இருந்தும் குழந்தைகளைத் திருடி வந்து விற்றுவருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பல்வேறு தொண்டு நிறுவனங்களில் நட்பு வைத்துள்ள இந்தக் கும்பல், அவர்கள்மூலம் குழந்தைகள் இருப்பதையும், குழந்தை வேண்டிவரும் தம்பதியரையும் தெரிந்துகொண்டு, குழந்தை வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்திவருகின்றனர். குழந்தை வேண்டி வரும் தம்பதிகள் யாரும் புகார் தெரிவிக்காததால், ராசிபுரத்தில் குழந்தை வியாபாரம் தங்குதடையின்றி தொடர்ந்து நடைபெறுகிறது' என்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க