`எங்களுக்கு ஸ்கெட்ச் போட்டாங்க; நாங்க முந்திக்கிட்டோம்!’- ரவுடி கொலையில் `திடுக்’ வாக்குமூலம் | Four from another gang arrested in the case of killing Rowdy

வெளியிடப்பட்ட நேரம்: 13:15 (25/04/2019)

கடைசி தொடர்பு:13:15 (25/04/2019)

`எங்களுக்கு ஸ்கெட்ச் போட்டாங்க; நாங்க முந்திக்கிட்டோம்!’- ரவுடி கொலையில் `திடுக்’ வாக்குமூலம்

`எங்களுக்கு ஸ்கெட்ச் போட்டாங்க; நாங்க முந்திக்கிட்டோம்!’- ரவுடி கொலையில் `திடுக்’ வாக்குமூலம்

வேலூரில் நீதிமன்றம் அருகே ரவுடியை ஓடஓட விரட்டிக் கொடூரமாகக் கொன்ற வழக்கில் மற்றொரு ரவுடிக் கும்பலைச் சேர்ந்த நான்குபேரைக் கைதுசெய்துள்ளனர் போலீஸார். ``எங்களை கொலைசெய்வதற்காக எதிர்த்தரப்பினர் ஸ்கெட்ச் போட்டதால், நாங்கள் முந்திக்கொண்டோம்’’ என்று கைதுசெய்யப்பட்டவர்கள் அளித்துள்ள வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொலை செய்யப்பட்ட ரௌடி செல்வராஜ்

வேலூர் சத்துவாச்சாரி விஜயராகவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் `ஜி’ என்கிற செல்வராஜ். ராணுவத்தில் பணியாற்றிய இவர், கடந்த 2007-ம் ஆண்டு சத்துவாச்சாரியைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காதலித்தார். அந்தப் பெண் இவரின் காதலை ஏற்றுக்கொள்ளாததால், அவர் வீட்டில் கையெறி குண்டு வீசினார். ஆனால், குண்டு வெடிக்கவில்லை. இதுதொடர்பாக, செல்வராஜ் கைதுசெய்யப்பட்டதுடன், ராணுவத்திலிருந்து `டிஸ்மிஸ்’ செய்யப்பட்டார். ஜாமீனில் வெளியேவந்த அவர், 2010-ம் ஆண்டு கே.வி.குப்பத்தைச் சேர்ந்த சாமூண்டீஸ்வரி என்ற பெண்ணைத் திருமணம் செய்தார். சில மாதங்களில் மனைவி பிரிந்துசென்றுவிட்டதால், ஆத்திரமடைந்த செல்வராஜ், மாமனார் வீட்டுக்குத் தீ வைத்தார். அதைத்தொடர்ந்து, 2014-ம் ஆண்டு தன் மாமனார் பெருமாளை செல்வராஜ் கொலை செய்தார். கடந்த ஆண்டு சத்துவாச்சாரி சாலை கெங்கையம்மன் கோயில் தேருக்குத் தீவைத்தது போன்ற பல்வேறு குற்றச் செயல்களிலும் ஈடுபட்டுவந்தார்.

இந்த நிலையில், சத்துவாச்சாரி விஜயராகவபுரத்தில் கடந்த 20-ம் தேதி இரவு மது அருந்திக்கொண்டிருந்த செல்வராஜை, ஒரு கும்பல் சுற்றிவளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டியது. பலத்த வெட்டுக்காயங்களுடன் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து ஓடிய அவரை, அந்தக் கும்பல் நீதிமன்றம் வரை துரத்திச் சென்று, சரமாரியாக வெட்டிக் கொன்றது. இந்தக் கொலையை நேரில் பார்த்த மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். 

கைது செய்யப்பட்ட ரௌடியின் கூட்டாளிகள்

போலீஸார் விசாரணையில், சத்துவாச்சாரியைச் சேர்ந்த பிரபல ரவுடி வீச்சு தினேஷ் மற்றும் அவரின் கூட்டாளிகள் யுவராஜ், பிரபு, கணேசன், கிரிதரன் ஆகியோர் செல்வராஜை வெட்டிக் கொன்றது தெரியவந்தது. இதில் தினேஷ் தவிர மற்ற நான்குபேரையும் போலீஸார் கடந்த 24-ம் தேதி கைது செய்தனர். தினேஷைத் தேடிவருகிறார்கள். பிடிபட்டவர்கள் கொடுத்த வாக்குமூலத்தில், ``வேலூர் புதுவசூரைச் சேர்ந்த ரவுடியான வசூர் ராஜா கும்பலுக்கும், எங்களுக்கும் முன் விரோதம் இருக்கிறது. இதனால் வீச்சு தினேஷைக் கொலைசெய்ய வசூர் ராஜா மற்றும் அவரின் கூட்டாளிகள் திட்டம் வகுத்தனர். இந்தத் திட்டத்துக்கு செல்வராஜ் உடந்தையாக இருந்தார். எங்களைப் பற்றி வசூர் ராஜாவுக்கு செல்வராஜ் தகவல் அளித்தார். ஏற்கெனவே தினேஷ் கார் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்திலும் செல்வராஜுக்கு தொடர்பு இருந்தது. இதனால், அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டு, வெட்டிக் கொன்றோம்" என்று தெரிவித்தனர். கைதுசெய்யப்பட்ட நான்கு பேரும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வேலூரில் தொடரும் கொலைச் சம்பவங்களால் அந்த மாவட்ட மக்கள் பீதியிலும் அச்சத்திலும் இருக்கிறார்கள்.