`வீட்டுக்குவந்து மிரட்டுகிறார்!‍'- ஆளும்கட்சிப் பிரமுகர்மீது பாலியல்புகார் கொடுத்த பெண் அதிர்ச்சி | Perambalur Woman files sexual harassment complaint against ADMK cadre

வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (25/04/2019)

கடைசி தொடர்பு:16:00 (25/04/2019)

`வீட்டுக்குவந்து மிரட்டுகிறார்!‍'- ஆளும்கட்சிப் பிரமுகர்மீது பாலியல்புகார் கொடுத்த பெண் அதிர்ச்சி

பொள்ளாச்சி விவகாரத்தைப்போல் பெரம்பலூரில் பாலியல் விவகாரம் நடந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் போலீஸார், அ.தி.மு.க முக்கிய புள்ளிகளைக் காப்பாற்றும் நோக்கில் புகார் கொடுத்த பெண்ணை மிரட்டுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

பெரம்பலூர் எஸ்.பி அலுவலகம்

கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு விகடன் இணையதளத்தில் பொள்ளாச்சி விவகாரத்தைப்போல் பெரம்பலூரில் பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது என்று செய்தி வெளியிட்ட பிறகுதான் இச்சம்பவமே வெளிவரத்தொடங்கியுள்ளது. பெரம்பலூரில் உள்ள லோக்கல் சேனலைச் சேர்ந்த ஒரு நபர், அ.தி.மு.க-வில் உள்ள முக்கிய நபர்கள் என்னிடம் தொடர்பில் இருக்கிறார்கள்; அவர்களிடம் சென்றால் அரசு வேலை எளிதாக வாங்கிவிடலாம் என ஆசைவார்த்தை கூறி, இளம் பெண்களைப் பெரம்பலூரில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கவைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், பெண்களுடன் இருப்பதை, தெரியாமல் வீடியோவும் எடுத்துள்ளனர். இதை அப்பெண்களிடம் காட்டி, தனது நண்பர்களையும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட வைத்துள்ளனர். மேலும், மறுக்கும் பெண்களிடம் அந்த வீடியோவை இணையதளத்தில் விட்டுவிடுவதாகவும் மிரட்டிப் பணியவைத்துள்ளது அந்தக் கும்பல். இதில், அ.தி.மு.க முக்கியப் புள்ளிகளும் இதில் உடந்தையாக உள்ளனர்.

என்ன நடந்தது என்று காவல்துறையில் பேசினோம். அவர்களும் தங்களது அடையாளங்களை மறைத்துப் பேசினார்கள். ``நானும் ஒரு பெண் பிள்ளையைப் பெற்றவன்தான். என் பிள்ளைக்கு இப்படி நடந்தால் நான் மறைக்கப் பார்ப்பேனா. ஆனால், இச்சம்பவத்தை மறைக்கும் வேலையில் இறங்கியிருக்கிறார்கள்" என்று ஆதங்கத்தோடு பேசத்தொடங்கினார். ``படித்துமுடித்துவிட்டு வேலை தேடிச் செல்லும் பெண்களைக் குறிவைத்துத் தூக்குகிறது இக்கும்பல். சத்துணவு அமைப்பாளர் மற்றும் அங்கன்வாடிகளில் வேலை வாங்கித் தருவதாக விண்ணப்பித்திருந்த திருமணமான பெண்கள் மற்றும் இளம் பெண்களை அவர்களின் சூழ்நிலையை அறிந்துகொண்டு இதுவரையிலும் 10 பெண்களுக்கு மேல் ஏமாற்றியிருக்கிறார்களாம். அத்தோடு அந்தப் பெண்களிடம் இரவு பகல் பாராமல் போன் செய்து வேலை விஷயமா பேசவேண்டும்; சீக்கிரமா கிளம்பி பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள லாட்ஜுக்கு வாமா என்று கூப்பிடுவார்களாம். அந்தப் பெண்கள் வந்ததும் அவர்கள் நண்பர்களோடு படுமோசமான வார்த்தைகளால் பேசி அந்தப் பெண்ணை பாலியல் விவகாரத்துக்கு கட்டாயப்படுத்துவார்களாம்.

பாலியல்

வர மறுக்கும் பெண்களிடம் உன்னுடைய வீடியோ எங்களிடம் இருக்கிறது. அதை இணையதளத்தில் விட்டுவிடுவோம் என்று மிரட்டியிருக்கிறார்கள். இவர்களின் போக்கு எல்லை மீறியதும் தாங்க முடியாத திருச்சியைச் சேர்ந்த ஒரு பெண் பெரம்பலூர் எஸ்.பி ஆபீஸ்ல புகார் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், இதில் ஆளும் கட்சியைச் சேர்ந்த முக்கியப் புள்ளி உடந்தையாக இருப்பதால் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவே பயப்படுகிறார்கள். அத்தோடு புகார் கொடுத்த பெண்ணின் முகவரியை அந்த அ.தி.மு.க முக்கிய புள்ளியிடம் கொடுத்திருக்கிறார்கள். இச்சம்பவம் வெளியில் வந்தால் அ.தி.மு.க-வின் முக்கிய புள்ளியின் பெயர் அசிங்கமாகிவிடும் என்பதால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணை வீட்டிலேயே மிரட்டிவிட்டு வந்திருக்கிறார்கள். இதனால் அந்தப் பெண் செய்வதறியாது திகைத்துக்கொண்டிருக்கிறாராம்" என்று கூறினார்.