பொன்பரப்பியில் திடீர் வன்முறை ஏன்?- பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த செல்வ பெருந்தகை அதிர்ச்சி | Congress team visits Ponparappi

வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (25/04/2019)

கடைசி தொடர்பு:16:20 (25/04/2019)

பொன்பரப்பியில் திடீர் வன்முறை ஏன்?- பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த செல்வ பெருந்தகை அதிர்ச்சி

பொன்பரப்பி சம்பவத்தில் இந்து முன்னணி தலையிட்டிருக்கிறது. பட்டியலின மக்கள் வாக்களிப்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற நோக்கத்துக்காக இந்த மோதல் நடைபெற்றிருக்கிறது. இதற்கு காவல்துறையும் துணைபோயுள்ளது  எனக் காங்கிரஸ் கட்சியின் எஸ்.டி, எஸ்.சி பிரிவு மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை குற்றம்சாட்டியிருக்கிறார்.

                                                  செல்வப் பெருந்தகை

அரியலூர்  மாவட்டம், பொன் பரப்பி கிராமத்தில் தேர்தல் வாக்குப்பதிவு நாளன்று நடைபெற்ற வன்முறைச் சம்பவத்தில் ஒரு பிரிவினரின் வீடுகளின் ஓடுகள் சேதப்படுத்தப்பட்டன. இதில் பலர் காயமடைந்தனர். இந்த நிலையில், பொன் பரப்பி கிராமத்தில் நடைபெற்ற வன்முறைச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து காங்கிரஸ் கட்சியின் எஸ்.டி, எஸ்.சி பிரிவு மாநிலத் தலைவர் செல்வ பெருந்தகை சந்தித்து ஆறுதல் கூறினார்.

                                                   பொன்பரப்பி கிராமம்

 

பின்னர் ஜெயங்கொண்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தலித் மக்களை மிகக் கொடூரமாகத் திட்டமிட்டுத் தாக்கியுள்ளார்கள். அவர்களின் வீடுகளும் பெருமளவில் சேதப்படுத்தப்பட்டுள்ளன. சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் தேர்தல் சமயத்தில் கலவரங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளன. எனவே, காவல்துறை உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்திருக்கிறது. சிறுபான்மையாக வாழக்கூடிய தலித் மக்கள்மீது பெரும்பான்மையாக வாழக்கூடிய ஆதிக்க சக்திகள் தாக்குதல் நடத்துவார்கள் என்பது தெரிந்திருந்தும் அப்பகுதிகளில் காவல்துறை ஏன் உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கவில்லை என்பதுதான் மிகப்பெரிய வருத்தம் அளிக்கிறது.

                                                  பொன்பரப்பியில் நொறுக்கப்பட்ட வீடுகள்

 

காலை முதல் மதியம் 1 மணி வரை 60 விழுக்காட்டுக்கு மேல் வாக்களித்திருக்கிறார்கள் பட்டியல் இன மக்கள். வாக்களிப்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற வன்கொடுமையின் உச்சபட்சம்தான் இந்த வன்முறை. மாவட்ட நிர்வாகம் இப்பிரச்னையைச் சிறப்பாகக் கையாண்டுள்ளது. சீரமைப்பு பணிகள் விரைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது பாராட்டத்தக்கது.

                                                      எரிக்கப்பட்ட வாகனம்

 

இவ்வகையான வன்முறை வரக்கூடும் என்பது தெரிந்திருந்தும் காவல்துறை ஏன் உரிய பாதுகாப்பு அளிக்கவில்லை என்பதுதான் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. தற்போது கைது செய்யப்பட்டுள்ள 12 பேரும் உண்மையான குற்றவாளிகளா என காவல்துறை உறுதி செய்ய வேண்டும். இந்த வன்முறையில் புதியதாக இந்து முன்னணி தலையிட்டுள்ளது. இந்து முன்னணிக்கும் தேர்தலுக்கும் என்ன சம்பந்தம். காவல்துறை எந்தவித பாரபட்சமும் இல்லாமல் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வகையான நடவடிக்கைகளால் தான் வரும் காலங்களில் சாதிக் கலவரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். பாதிக்கப்பட்டவர்களுக்குரிய  நிவாரணம் அளிக்க வேண்டும். செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர் தாக்கியதைக் காங்கிரஸ் பேரியக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது எனக் கூறினார். பேட்டியின்போது காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.