`பெரம்பலூர் பாலியல் சம்பவத்தில் தொடர்புடைய அ.தி.மு.க புள்ளி யார்?' - வெளியானது அதிர்ச்சி ஆடியோ | Woman accuses Perambalur ADMK cadres over sexual harassment

வெளியிடப்பட்ட நேரம்: 17:31 (25/04/2019)

கடைசி தொடர்பு:18:08 (25/04/2019)

`பெரம்பலூர் பாலியல் சம்பவத்தில் தொடர்புடைய அ.தி.மு.க புள்ளி யார்?' - வெளியானது அதிர்ச்சி ஆடியோ

"வேலை வாங்கித் தருவதாகக் கூறி, எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார்கள். என்னைப்போல் பல பெண்களை ஏமாற்றியிருக்கிறார்கள். இச்சம்பவத்தில், பெரம்பலூர் அ.தி.மு.க முக்கிய புள்ளிகளுக்குத் தொடர்பு இருக்கிறது. இந்த வழக்கை முழுமையாக விசாரிக்க வேண்டும்" என்று பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் ஆடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இந்த ஆடியோவால் பெரம்பலூரில் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளதோடு அ.தி.மு.க-வில் பெரும் சலசலப்பு உண்டாகியுள்ளது.

பாலியல்

அந்தப் பெண் வெளியிட்டுள்ள ஆடியோவில் உள்ள தகவலை அப்படியே உங்களது பார்வைக்கு. திருச்சியைச் சேர்ந்த அந்தப் பெண்ணின் பாதுகாப்பு கருதி அவரது பெயர் பதிவு செய்யவில்லை.

"நாங்கள் படித்து முடித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருந்தோம். அப்போது ஒருவர் உங்களுக்கு வேலை வேண்டுமென்றால் அ.தி.மு.க-வில் உள்ள முக்கிய புள்ளி என்னிடம் இருக்கிறார். அவர்களிடம் சென்றால் கண்டிப்பாக உங்களுக்கு வேலை கிடைக்கும் என்றார். நாங்கள் சரி என்று ஒப்புக்கொண்டோம். பின்பு, எங்களுடைய போன் நம்பரை வாங்கி வைத்துக்கொண்டார்கள். ஒருநாள் போன் அடித்து பெரம்பலூரில் உள்ள  தனியார் ஹோட்டலில் இன்டர்வியூ நடக்க இருக்கிறது என்று சொன்னார்கள். நாங்களும் அந்த லாட்ஜுக்குச் சென்றோம். பிறகு, இங்கு நடக்கவில்லை. பின்னர், வேறோரு ஹோட்டலுக்கு வாங்க என்று சொன்னார்கள். இன்டர்வியூ முடிந்துவிடும் என்பதால் அவசரம் அவசரமாக அந்த ஹோட்டலுக்குச் சென்றோம். அங்கு சென்றபோது  நான்கைந்து பேர்  சூழ்ந்துகொண்டு எங்களை வீடியோ எடுத்தார்கள். இது சாதாரண நிகழ்வுதானே என்று சும்மாக இருந்துவிட்டோம். பின்பு அவர்களது பேச்சில் வித்தியாசமாகவும் தவறாகவும் இருந்தது. நாங்கள், இப்படிப்பட்ட வேலை வேண்டாம் என்று அந்த இடத்தைவிட்டு கிளம்பிவிட்டோம். கொஞ்ச நாள்களில் இன்னொரு போன் வந்தது.

உன்னோடு வேலை விஷயமா பேச வேண்டும். சீக்கிரம் வாங்க என்று மிரட்டினார்கள். அதெல்லாம் வேண்டாம் என்று சொன்னேன். பிறகு அவர்கள் உன்னைப் பற்றிய வீடியோ எங்களிடம் இருக்கிறது. அதை இணையதளத்தில் வெளியிடப்போகிறோம். இந்த வீடியோ வெளியே வந்தால் உங்களது குடும்பமே தூக்கில் தொங்கும் செய்யட்டுமா என்று கேட்டார்கள். அத்தோடு எங்களை ஒண்ணும் பண்ண முடியாது. ஆளுங்கட்சி சப்போர்ட் இருக்கிறது என்று மிரட்டி போனை வைத்தார்கள். நானும் பயந்துகொண்டு வீட்டுக்குத் தெரியாமல் அந்த ஹோட்டலுக்குச் சென்றேன். அங்கு ஐந்து பேர் கொண்ட கும்பல் எங்களை மிரட்டியது. நீ குளிச்சிட்டு வந்தால் இந்த வீடியோவை டெலிட் பண்ணுவதாகச் சொன்னார்கள்.

தமிழ்செல்வன்

அவர்கள் சொன்னதால் குளிக்கச் சென்றேன். அதன் பிறகு, நான் குளித்துக்கொண்டிருந்ததை எனக்குத் தெரியாமல் வீடியோவாக எடுத்து வைத்து மிரட்டினார்கள். மீண்டும் இந்த வீடியோவை டெலிட் செய்ய வேண்டுமென்றால் நீ தமிழ்ச்செல்வனிடம் செல்ல வேண்டும் என்று மிரட்டினார்கள். இல்லையென்றால் உனது வீடியோவை இணையதளத்தில் விட்டுவிடுவோம் என்று மிரட்டத் தொடங்கினார்கள். அதற்கெல்லாம் முடியாது என்று அந்த இடத்தைவிட்டுக் கிளம்பி வந்துவிட்டேன். திரும்பவும் மீண்டும் மீண்டும் போன் செய்து என்னை வற்புறுத்திக்கொண்டே இருந்தார்கள். ஒரு காலகட்டத்தில் இவர்கள் கொடுத்த டார்ச்சர் தாங்க முடியாமல் ஒரு முறை தற்கொலைக்கு முயன்றேன். பிறகு, வேறு வழியில்லாமல் ஒரு வாரத்துக்கு முன்பு பெரம்பலூர் எஸ்.பி-யிடம் புகார் கொடுத்தேன். அவர்களும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் வழக்கறிஞர் அருளிடம் இது குறித்துப் பேசினேன். என்னைப்போல் பலர் இவர்களிடம் சிக்கியிருக்கிறார்கள். அவர்களையும் மீட்க வேண்டும் என்று, அத்தோடு இக்குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்'' என்று அந்த ஆடியோவில் குறிப்பிட்டிருந்தார் அந்தப் பெண்மணி.

இதுகுறித்து எம்.எல்.ஏ தமிழ்ச்செல்வனிடம் போனில் தொடர்புகொண்டோம். அவரது உதவியாளர் போனை எடுத்து, `அண்ணன் சாமி கும்பிட்டுக்கொண்டிருக்கிறார். அவர் வெளியே வந்ததும் பேசச் சொல்கிறேன்' என்று தொடர்பைத் துண்டித்தார்.