`தஞ்சாவூர் கலெக்டர் மின்சாரம் கொடுக்கவும், கடலூர் கலெக்டர் உதவுறதாவும் சொல்லியிருக்காங்க!' - சஹானா | student Sahana says, `we are getting electricity at home!'

வெளியிடப்பட்ட நேரம்: 18:35 (25/04/2019)

கடைசி தொடர்பு:18:35 (25/04/2019)

`தஞ்சாவூர் கலெக்டர் மின்சாரம் கொடுக்கவும், கடலூர் கலெக்டர் உதவுறதாவும் சொல்லியிருக்காங்க!' - சஹானா

றுமை துரத்திய நிலையிலும் ப்ளஸ் டூவில் அரசுப் பள்ளியில் படித்து 524 மார்க் எடுத்து அசத்திய பேராவூரணி மாணவி சஹானா குறித்து மேற்படிப்பு படிக்க வழியில்லாமல் தவித்து வந்ததையும் விகடன் இணையதளத்தில் எழுதியிருந்தோம். இதைப் படித்த பலரும் சஹானாவுக்கு உதவியிருக்கிறார்கள்.

சஹானா

இதுகுறித்து சஹானாவிடம் பேசினோம், ``என்னைப் பற்றி செய்தி வெளியான உடனேயே பலர் போன் செய்து உதவுவதாக கூறி ஆதரவாக பேசி எதிர்காலத்துக்கான நம்பிக்கையை விதைத்தனர். முகம் தெரியாத பலர் என் அம்மாவின் வங்கிக் கணக்கில் அவர்களால் முடிந்த பணத்தைச் செலுத்தினர். இதுவரை ரூ 45,000 வரை எனக்குப் பணம் கிடைத்துள்ளது.

தஞ்சாவூர் கலெக்டர் அண்ணாத்துரை பேராவூரணி பி.டி.ஓவை அனுப்பி வைத்து எங்க வீட்டைப் பார்க்கச் சொன்னார். உடனே சூரிய ஒளி மின்சாரம் அமைத்துக் கொடுத்து எங்க வீட்டுக்கு லைட் வசதி ஏற்படுத்தித் தர உத்தவிட்டார். மின்சாரத்தையே பார்க்காத எங்க குடிசை வீட்டில் லைட் எரியப் போகிறது... எங்களுக்கும் வெளிச்சம் வரப் போகிறது.

சஹானா

இதேபோல் கடலூர் கலெக்டர் போன் செய்து பேசி `நான் பக்கத்து ஊர்தான். உனக்கு என்ன உதவி தேவையோ அதை தயங்காம எப்போது வேண்டுமானாலும் என்னிடம் நீ கேட்கலாம்' என அவருடைய நம்பரைக் கொடுத்திருக்கிறார். அரசு அதிகாரிகள் பலர் போன் செய்து ஆறுதல் வார்த்தைகள் கூறி உற்சாகப்படுத்திப் பேசினர். எதிர்காலத்தைப் பற்றிய கேள்விக்குறியோடு இருந்த எனக்கு, அனைவரும் காட்டி வரும் அன்பும் அக்கறையும் உதவியும் பெரும் ஊக்கத்தையும் நம்பிக்கையையும் தந்திருக்கிறது. இப்போது நான் மட்டுமல்ல எங்க குடும்பமே மகிழ்ச்சியோடு இருக்கிறோம். இதற்கு காரணமான விகடனுக்கு நன்றி'' என நெகிழ்ச்சியோடு தெரிவித்தார், சஹானா.

உங்கள் வாழ்க்கையிலும் ஒளி பரவட்டும் சஹானா!

நீங்க எப்படி பீல் பண்றீங்க