`பாலம் உடைந்ததாக வதந்தி பரப்புகிறார்கள்; அது தகர ஷீட்தான்!' - மார்த்தாண்டம் பாலம் சர்ச்சைக்கு அதிகாரி விளக்கம் | Highways department official explains about kaniyakumari marthandam fly over controversy

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (25/04/2019)

கடைசி தொடர்பு:20:00 (25/04/2019)

`பாலம் உடைந்ததாக வதந்தி பரப்புகிறார்கள்; அது தகர ஷீட்தான்!' - மார்த்தாண்டம் பாலம் சர்ச்சைக்கு அதிகாரி விளக்கம்

ன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மேம்பாலத்தின் ஒரு பகுதி உடைந்து விழுந்துள்ளதாகச் சிலர் சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள். அதை நம்பவேண்டாம் எனத் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

மார்த்தாண்டம் மேம்பாலம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் இருந்துவந்தது. இதனால் நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் கிம்ஸ் உள்ளிட்ட மருத்துவமனைகளுக்குச் செல்லும் ஆம்புலன்ஸ் மற்றும் உள்ளூர் மருத்துவமனைகளுக்குச் செல்லும் ஆம்புலன்ஸ்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்குவது வாடிக்கை. இதனால் நோயாளிகள் கடும் அவதி அடைந்து வந்தனர். மேலும், திருவனந்தபுரம் விமான நிலையத்துக்குச் செல்லும் பயணிகளும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி விமானங்களைத் தவறவிட்ட சம்பவங்களும் நடந்துள்ளன. போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பரிந்துரையின்பேரில் மார்த்தாண்டம் மற்றும் பார்வதிபுரத்தில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மார்த்தாண்டம் மேம்பாலம்

மார்த்தாண்டத்தில் சுமார் 179 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் இரண்டரை கிலோ மீட்டர் நீளத்துக்கு இரும்பு மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. மார்த்தாண்டம் மேம்பாலம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திறக்கப்பட்டது. அப்போது மேம்பாலம் மக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டது. மக்கள் நடந்து சென்றபோது மேம்பாலம் ஆடுவது போன்ற உணர்வு ஏற்பட்டது. இதனால் பாலம் ஆடுகிறது என சிலர் வதந்தி கிளப்பினர். வாகனங்கள் செல்லும்போது அதிர்வைத் தாங்கும் விதமாக பேரிங் சிஸ்டம் அமைக்கப்பட்டதால் மிதக்கும் அனுபவம் ஏற்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

மார்த்தாண்டம் மேம்பாலம்

இந்த நிலையில், மார்த்தாண்டம் மேம்பாலத்தின் ஒரு பகுதி உடைந்து விழுந்துவிட்டதாக வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தகவல் பகிரப்பட்டது. இதுகுறித்து மார்த்தாண்டம் மேம்பால பகுதியில் நேரில் சென்று விசாரணை நடத்தினோம். மார்த்தாண்டம் மேம்பாலம் ஒய் வடிவில் பிரியும் பகுதிக்கு அருகே பாலத்தின் அடிப்பகுதியில் வாட்டர் புரூப் ஷீட் உடைந்து விழுந்திருந்தது.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறையில் மேம்பாலப் பணிகளைக் கவனித்து வரும் பொறியாளர் மகேஷ்வரனிடம் பேசினோம், ``மேம்பாலம் கான்கிரீட் அமைக்கப் பலகைகள் பயன்படுத்த வேண்டும். அது காலதாமதத்தை ஏற்படுத்தும் என்பதால், வாட்டர் புரூப் தகர ஷீட்களைப் பயன்படுத்தி கான்கிரீட் போட்டுள்ளோம். அந்த தகர ஷீட் ஒன்று ஏற்கெனவே கழன்று நின்றது. அதை அகற்றும்படி ஊழியர்களிடம் கூறியிருந்தோம். அவர்கள் அதை அகற்றாமல் வைத்திருந்தனர். அந்த ஷீட் கழன்று விழுந்ததை மேம்பாலம் உடைந்துவிட்டதாகச் சிலர் தவறான தகவல் பரப்புகிறார்கள். மார்த்தாண்டம் மேம்பாலம் பலமாக இருக்கிறது வதந்திகளை மக்கள் நம்பவேண்டாம்" என்றார்.