``மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மிகுந்த பாதுகாப்பாக உள்ளன" - கரூர் எஸ்.பி உறுதி! | Electronic voting machines are very safe says Karur SP

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (25/04/2019)

கடைசி தொடர்பு:22:00 (25/04/2019)

``மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மிகுந்த பாதுகாப்பாக உள்ளன" - கரூர் எஸ்.பி உறுதி!

``நடந்து முடிந்த கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மிகுந்த பாதுகாப்பாக உள்ளன" என்று கரூர் மாவட்ட கண்காணிப்பாளர் ராஜசேகரன் தெரிவித்தார்.

 கலெக்டர் மற்றும் எஸ்.பி ஆய்வு

கடந்த 18-ம் தேதி தமிழகம் மற்றும் புதுவை மாநிலங்களில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிகை அடுத்த மாதம் 23-ம் தேதி நடைபெற இருப்பதால், எல்லா தொகுதிகளிலும் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களில் சீல் வைத்து, வைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், கரூர் நாடாளுமன்றத் தொகுதி தேர்தலில் வாக்குப் பதிவுக்குப் பின்னர், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் இடமான, கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தளவாபாளையம் குமாரசாமி பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. 
அடுத்த மாதம் 23-ம் தேதி நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை ஒரே நாளில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், கரூர் நாடாளுமன்றத் தொகுதியின் தி.மு.க கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான ஜோதிமணி, வாக்கு எண்ணும் மையத்தைப் பார்வையிட்டபின், ``தகுந்த போலீஸ் பாதுகாப்பில்லை. இந்த மாவட்டக் கலெக்டரும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும் ஆளுங்கட்சிக்கு சாதகமாக நடந்துகொள்கிறார்கள். போதிய பாதுகாப்பில்லை. இவர்கள் இருவரையும் உடனே இடமாற்றம் செய்ய வேண்டும். இவர்களைப் பற்றி தேர்தல் ஆணையத்துக்குப் புகார் அனுப்பி இருக்கிறோம்" என்று அதிரடியாக பேட்டியளித்தார்.


 
 ராஜசேகரன்

இந்நிலையில், கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகனும், எஸ்.பி ராஜசேகரனும் கரூர் குமாரசாமி கல்லூரிக்கு விரைந்தனர். பாதுகாப்பு குறித்தி ஆய்வுசெய்தனர். அதன்பின்னர், கரூர் மாவட்ட எஸ்.பி தரப்பில், ``கரூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், விராலிமலை, மணப்பாறை உள்ளிட்ட 6 சட்டமன்றத் தொகுதிகள் வாரியாக அறைகளில் பூட்டிய அறைக்குள் சீலிடப்பட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முதல் அடுக்கு பாதுகாப்பில் மத்திய எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் 23 பேர் துப்பாக்கி ஏந்தி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்குப் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள் இரண்டாம் அடுக்கு பாதுகாப்பில், தமிழ்நாடு சிறப்புக் காவல் படை வீரர் உட்பட உதவி ஆய்வாளர்கள் மற்றும் 40 காவலர்களுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 


 எஸ்.பி ராஜசேகரன் ஆய்வு

இதேபோல, மூன்றாம் அடுக்கு பாதுகாப்பில், கரூர் மாவட்ட ஆயுதப்படை காவலர்கள் மற்றும் தாலுக்கா காவல் நிலைய காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் 178 பேர் உட்பட மொத்தம் 243 அதிகாரிகள் மற்றும் காவலர்கள் தினந்தோறும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இவர்கள் சுழற்சி முறையில் இரண்டு குழுவினராக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இதுதவிர, சுழற்சி முறையில் ஒரு காவல் துணை கண்காணிப்பாளர் பொறுப்பில் கூடுதல் பாதுகாப்புக்காக ஒரு வஜ்ரா அதிரடிப்படை வாகனமும், ஒரு விரைவுப் படை வாகனமும், வாக்கு எண்ணும் மையத்தின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், வாக்கு எண்ணும் கட்டடத்தின் மேற்கூரையின் மீது பாதுகாப்பு காவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். அங்கு வெடிபொருள் சோதனை நிபுணர்கள் உதவியுடன், வெடிகுண்டு சோதனை தளவாடங்களும் அமைக்கப்பட்டுள்ளன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதிகம் படித்தவை