`கரூர் ஆட்சியர் கரை வேட்டி கட்டாத அ.தி.மு.ககாரர்!' - ஜோதிமணி காட்டம் | karur Congress candidate Jothimani criticises Karur collector

வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (25/04/2019)

கடைசி தொடர்பு:22:30 (25/04/2019)

`கரூர் ஆட்சியர் கரை வேட்டி கட்டாத அ.தி.மு.ககாரர்!' - ஜோதிமணி காட்டம்

வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு

``கரூர் மக்களவைத் தொகுதியின் தேர்தல் அதிகாரி மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை மாற்றி வாக்கு எண்ணிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்று கரூர் நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார்.

வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு.


கடந்த பத்து நாள்களுக்கு மேலாக கரூர் மாவட்ட ஆட்சித்தலைவரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான அன்பழகனுக்கும், காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணிக்கும் இடையில் கருத்து மோதல் வெடித்துவருகிறது. ``ஜோதிமணியும், தி.மு.க மாவட்டப் பொறுப்பாளர் செந்தில் பாலாஜியும் என் வீட்டுக்கு இரவு 12 மணிக்கு 100 பேரை அனுப்பி, எனக்கு கொலைமிரட்டல் விடுத்தார்கள். அவர்கள் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் செய்துள்ளேன்" என்று அதிரடியாக பேட்டி கொடுத்தார். இந்த நிலையில், ஜோதிமணியோ, ``` `கரூர் கலெக்டர் தேர்தலை நிறுத்திவிடுவேன்' என்று மிரட்டினார். ஆளுங்கட்சி அமைச்சரான எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு ஆதரவாக செயல்படும் அவரை மாற்ற வேண்டும்" என்று பதிலடி கொடுத்தார். அதோடு, கலெக்டர் தன்னிடம் பேசிய செல்போன் ஆடியோவை சமூகவலைதளங்களில் வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்தினார். 

கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி ஆய்வு

இந்த நிலையில், கரூர் மக்களவைத் தொகுதியின் வாக்கு எண்ணிக்கை வரும் 23-ம் தேதி கரூரை அடுத்த தளவாபாளையத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது. கடந்த ஐந்து நாள்களுக்கு முன்பு காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி வாக்கு எண்ணும் மையத்தைப் பார்வையிடச் சென்றார்.

அப்போது, `வாக்கு எண்ணும் மையத்தில் போதுமான பாதுகாப்பு இல்லை' என்றும்., `தேர்தல் நடத்தும் அதிகாரிகள் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள்' எனவும் குற்றம்சாட்டி பேட்டியளித்த அவர், தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தும் இருந்தார். இதையடுத்து, இன்று கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரி இராஜாராமன் தலைமையில் வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன் பின்னர், கரூர் மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

ஜோதிமணி

அவர் பேசுகையில், ``கரூர் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான அன்பழகன் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ராஜசேகரன் ஆகியோரை மாற்ற வேண்டும். நியாயமான தேர்தல் நடத்தும் அதிகாரியைக் கொண்டு வாக்கு எண்ணிக்கையை நடத்த வேண்டும். வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு மத்திய பாதுகாப்பு படை மற்றும் கூடுதல் கண்காணிப்புக் கேமராக்களைப் பொருத்த வேண்டும். தேர்தல் பிரசாரம் நிறைவுறும் நாளில், கரூர் நாடாளுமன்றத் தேர்தல் அதிகாரி கொடுத்த புகாரில் இன்று முன்ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளோம். அதன்படி, நீதிமன்றம் மாவட்ட ஆட்சியரிடம் அதற்கான ஆதாரமாக அவருடைய வீட்டின் முன்பு உள்ள சிசிடிவி பதிவுகளை சமர்ப்பிக்க ஆணை பிறப்பித்துள்ளது.

அன்பழகன் (கரூர் மாவட்ட ஆட்சியர்)

எனவே, மிக விரைவில் மாவட்ட ஆட்சியர் பொய் புகார் அளித்தது நீதிமன்றம் மூலம் உலகுக்குத் தெரிய வரும். ஒருதலைபட்சமாக, ஆளுங்கட்சியின் ஊதுகுழலாக கரை வேட்டி கட்டாத அ.தி.மு.க கட்சிக்காரராக ஒரு தேர்தல் அதிகாரி செயல்படுவது குறித்த புகார் அடிப்படையில், தேர்தல் ஆணையம் தேர்தல் அதிகாரியை அனுப்பி, விசாரணை மேற்கொண்டிருக்கிறார்கள். இன்று வாக்கு எண்ணும் மையத்தில் என் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார்கள். அந்த ஆய்வினை அவர் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிப்பார். 'கலெக்டர் மற்றும் எஸ்.பியை மாற்ற வேண்டும்' என்று கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி இராஜாராமனிடம் கூறியுள்ளோம்" என்றார்.