பொன்னமராவதியில் பாதுகாப்புப் பணியில் இருந்த பெண் காவலர் தற்கொலை முயற்சி! | Female police suicide attempt in ponnamaravathi

வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (25/04/2019)

கடைசி தொடர்பு:08:25 (26/04/2019)

பொன்னமராவதியில் பாதுகாப்புப் பணியில் இருந்த பெண் காவலர் தற்கொலை முயற்சி!

பொன்னமராவதியில், பாதுகாப்புப் பணியில் இருக்கும்போது தற்கொலைக்கு முயன்ற பெண் காவலருக்கு, புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்தச் சம்பவம், புதுக்கோட்டை காவல் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சென்னிமலையைச் சேர்ந்த சாமிநாதனின் மகள் நந்தினி (22). புதுக்கோட்டை ஆயுதப் படையில் காவலராகப் பணிபுரிந்து வருகிறார். வாட்ஸ்அப்பில், ஒரு சமூகத்தினரை மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த சிலர் தவறாகச் சித்திரித்து காணொலி வெளியிட்ட சம்பவம் பொன்னமராவதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வாட்ஸ்அப் காணொலி எதிரொலியாக, அங்கு வன்முறை வெடித்தது. இதனால், பொன்னமராவதியில் ஆயிரக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்த நிலையில்தான், நந்தினி கடந்த ஒரு வாரமாக பொன்னமராவதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவந்தார். அப்போது, பணியில் இருக்கும்போது மயங்கி விழுந்தார். சக போலீஸார் அவரை மீட்டு பொன்னமராவதி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். நந்தினி பூச்சி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாகத் தெரியவந்தது.

போலீஸாரிடம் விசாரணை

இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக, புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. பணிச்சுமை காரணமாகத் தற்கொலைக்கு முயன்றாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்பதுகுறித்து பொன்னமராவதி போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். முன்னதாக, திருச்சி மத்திய மண்டல ஐஜி வரதராஜு, புதுக்கோட்டை எஸ்பி செல்வராஜ் ஆகியோர், புதுக்கோட்டை ஆயுதப்படை காவல் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர்.