கேரளாவில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை: குமரியில் விடிய விடிய மழை | Tamilnadu, Kerala, Rain, South West monsoon rains, kanyakumari, Dam

வெளியிடப்பட்ட நேரம்: 15:36 (01/06/2013)

கடைசி தொடர்பு:15:07 (01/06/2013)

கேரளாவில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை: குமரியில் விடிய விடிய மழை

சென்னை: கேரளாவில் தென் மேற்கு பருவ மழை இன்று தொடங்கிய உள்ளதால் தமிழகத்தின் எல்லையான கன்னியாகுமரியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்திலும் பருவமழை தென்பட தொடங்கியுள்ளது.

கேரளாவில் கடந்த ஆண்டு ஜூன் 2வது வாரமே தென்மேற்கு பருவமழை தொடங்கியது. எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. இதனால்  குமரி மாவட்டத்திலும் மழை போதுமான அளவுக்கு இல்லை. பருவமழை பொய்த்ததால் தமிழகத்தில் கடும் வறட்சி நிலவியது.

தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் கேரளாவில் தொடங்குவது வழக்கம். அப்போது குமரி மாவட்டத்திலும் கணிசமாக மழை பெய்யும். இந்தாண்டு ஜூன் 1ஆம் தேதி (இன்று) முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. கேரளாவில் இந்தாண்டு தென்மேற்கு பருவமழை 98 சதவீதம் அளவுக்கு பொழியும் வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கேரளாவின் மாலத்தீவு பகுதிகள் மற்றும் மாநிலத்தின் உட்பகுதிகளில் நேற்றிரவில் பலத்த மழை பெய்து பருவமழையை ஆரம்பித்து வைத்தது.

இது குறித்து திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், கேரளாவில் எதிர்பார்த்தப்படி தென்மேற்கு பருவமழை தொடங்கி விட்டது. மாநிலம் முழுவதும் நேற்றிரவு நல்ல மழை பெய்துள்ளது. இன்னும் 48 மணி நேரத்திற்கு மாநிலத்தில் பரவலான மழை பெய்யும். இன்று காலை 8 மணி நிலவரப்படி காசர்கோட்டில் அதிகபட்சமாக 8 செ.மீ. மழை பதிவாகி உள்ளது என்றார்.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதை அடுத்து கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று காலை தொடங்கிய மழை இரவில் பலத்த மழையாக மாறி விடிய விடிய பெய்தது.

கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரை அனைத்து இடங்களிலும் மழை பெய்தது. அதிகபட்சமாக சிற்றாறு பகுதியில் 66.8 மி.மீட்டர் மழை பதிவாகியது. இந்த மழையால் வறண்டு கிடந்த அணைகளுக்கு நீர்வரத்து வர தொடங்கி உள்ளது.

பேச்சிப்பாறை அணைக்கு இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 464 கனஅடி தண்ணீர் வருகிறது. குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவியிலும் கணிசமாக தண்ணீர் கொட்டுகிறது. மேற்கு மாவட்ட ஆறுகளிலும் மழை நீர் கரைபுரண்டு ஓடுகிறது.

இன்று காலையிலும் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பலத்த மழை கொட்டியது. அதிகாலை 4 மணிக்கு தொடங்கிய மழை 6 மணி வரை கொட்டித் தீர்த்தது. அதன் பிறகு பல இடங்களிலும் குற்றால சாரலை போல் தூறிக்கொண்டிருந்தது. அதோடு கோடையின் வெப்பம் தணிந்து குளிர்க் காற்றும் இதமான சீதோஷணமும் நிலவியது.

இன்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழை அளவு மி.மீட்டரில்... பெருஞ்சாணி 32, திருவட்டார் 12, முள்ளங்கினாவிளை 28, புத்தன் அணை 32.6, மயிலாடி 13.4, கொட்டாரம் 9.4, சுருளோடு 36, குருந்தன்கோடு 25.2, அடையாமடை 52, கோழிப்போர் விளை 35,  பூதப்பாண்டி 20.1, நாகர்கோவில் 20, கன்னிமார் 18.2, ஆரல்வாய் மொழி 64, பேச்சிப்பாறை 58.6, சிற்றாறு-2 55.4, பொய்கை ஆறு 6.4, மாம்பழத்துறையாறு 23, இரணியல் 14.2, ஆணைக் கிடங்கு 23.

மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று கன மழை பெய்தது. கோடை வெயிலால் அவதியுற்று வந்த மக்கள் இந்த மழையால் சற்று மகிழ்ச்சி அடைந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக இடி மின்னலுடன் கூடிய கன மழை பொழிந்தது. இதனால், சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதே போல், ஓசூரிலும் கனமழை பொழிந்தது.

சேலம் மாவட்டத்தில் சுமார் இரண்டு மணி நேரம் மழை பொழிந்தது. கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டு வந்த விவசாயிகள் இந்த மழையால் மகிழ்ச்சி அடைந்தனர். நீலகிரி, தஞ்சை, திருவள்ளூர் மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்