``சின்னத்தை ஞாபகப்படுத்த கிஃப்ட் பாக்ஸில் சாக்லேட்!” - ஒட்டப்பிடாரம் தொகுதியில் அ.ம.மு.க பலே பிளான் | Gift box should be given to chocolate in the box to remind the symbol

வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (26/04/2019)

கடைசி தொடர்பு:07:47 (26/04/2019)

``சின்னத்தை ஞாபகப்படுத்த கிஃப்ட் பாக்ஸில் சாக்லேட்!” - ஒட்டப்பிடாரம் தொகுதியில் அ.ம.மு.க பலே பிளான்

``நம்ம சின்னம் பரிசுப்பெட்டி என்பதை வயதானவர்களுக்கு  நினைவுபடுத்தும் வகையில், சிறிய கிஃப்ட் பாக்ஸில் சாக்லேட் போட்டுக் கொடுக்க வேண்டும்” என ஐடியா கொடுத்து, தூத்துக்குடியில் நடைபெற்ற அ.ம.மு.க செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசப்பட்டது.

ஒட்டபிடாரம்

தமிழகத்தில் சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் ஒட்டப்பிடாரம் ஆகிய நான்கு தொகுதிகளில், வரும் மே-19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. ஒட்டப்பிடாரம் தொகுதியின் முந்தைய எம்.எல்.ஏ சுந்தர்ராஜ், அ.தி.மு.க சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டு வெற்றிபெற்றார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, தினகரன் பக்கம் தாவியதால், தகுதிநீக்கம் செய்யப்பட்ட18 எம்.எல்.ஏ-க்களில் இவரும் ஒருவர். முந்தைய தேர்தலில் வெற்றிபெற்ற சுந்தர்ராஜ், அரசு குவாரி ஒப்பந்தம் பெற்றுள்ளதை மறைத்து வேட்புமனு தாக்கல்செய்து தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார் என புதியதமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருந்ததால், நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலுடன் நடைபெறவேண்டிய இத்தொகுதியின் இடைத்தேர்தல் நடத்தப்படவில்லை.

இந்நிலையில், இந்த வழக்கை கிருஷ்ணசாமி வாபஸ் பெற்றதால், மற்ற 3 தொகுதிகளுடன் இந்தத் தொகுதிக்கும் சேர்த்து இடைத்தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம். இத்தொகுதியில் வெற்றிபெற்று தகுதிநீக்கம் செய்யபட்ட சுந்தர்ராஜுவையே  அ.ம.மு.க வேட்பாளராக அறிவித்தார் தினகரன். இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில், அ.ம.மு.க செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய தென்மணடல அமைப்புச் செயலாளர் மாணிக்கராஜா, “அ.தி.மு.க-வில் இருந்து தினகரன் நீக்கப்பட்டதும் 18 எம்.எல்.ஏ-க்களில்  முதலில்  தினகரனை நேரில் சந்தித்தது சுந்தர்ராஜ்தான்.

கிப்ட் பாக்ஸ் சின்னம் குறித்து அமமுக வினர்

இந்தத் தொகுதியில் மாவீரன் எனச் சொல்லப்பட்ட புதியதமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியையே எதிர்த்து வெற்றிபெற்றார்.  வ.உ.சிதம்பரனார், கட்டபொம்மன், வெள்ளையத்தேவன், சுந்தரலிங்கம் ஆகிய வீரர்கள் பிறந்தமண்ணில் ஒருவீரனுக்குத்தான் மக்கள் வாக்களிப்பார்கள். இத்தொகுதியில் அ.தி.மு.க., வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மோகனைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. விளாத்திகுளம் தொகுதியில் சீட் கிடைக்காததால், சுயேச்சையாக நின்று அமைச்சர் கடம்பூர் ராஜு-க்கு தலைவலிகொடுத்த  முன்னாள் எம்.எல்.ஏ மார்க்கண்டேயனைப் போல, சீட் கொடுக்கிறோம் எனச் சொல்லி கடைசி வரை ஏமாற்றிய அக்கட்சியின் பெண் நிர்வாகி போர்க்கொடி தூக்கியதால், அங்கும் சலசலப்பு எற்பட்டுள்ளது.  இந்தத் தொகுதியில் டி.டி.வி.தினகரன் நிற்பதாகவே நினைக்க வேண்டும்” என்றார்.

“போன தடவை அ.தி.மு.க சார்பில் வெற்றிபெற்று எம்.எல்.ஏ ஆனதால், இந்த முறையும் சுந்தர்ராஜ் அ.தி.மு.க சார்பில்தான் தேர்தலில் போட்டியிடுகிறார்னு வயதானவர்கள் நினைத்துவிடக் கூடாது. அதனால், சிறிய கிஃப்ட் பாக்ஸ் ரெடி பண்ணி, அதற்குள் சாக்லேட் மிட்டாய்கள் போட்டு, வயதானவர்கள் இருக்கும் வீடுகளில் நம் தொண்டர்கள் கொடுக்க வேண்டும். நமது சின்னம் பரிசுப்பெட்டி என்பது தெரிய வேண்டும்” என அமைப்புச் செயலாளர் ஆதித்தன் பேசியதுதான் ஹைலைட். இந்த ஐடியாவைக் கேட்டு தொண்டர்கள் அசந்து போனார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க