`` தங்களை காப்பாற்றிக்கொள்வதற்காக பா.ஜ.க-வுடன் கூட்டணி!" - அ.தி.மு.க-வை விளாசிய ஈஸ்வரன் | Kongu Eshwaran press meet

வெளியிடப்பட்ட நேரம்: 10:00 (26/04/2019)

கடைசி தொடர்பு:10:00 (26/04/2019)

`` தங்களை காப்பாற்றிக்கொள்வதற்காக பா.ஜ.க-வுடன் கூட்டணி!" - அ.தி.மு.க-வை விளாசிய ஈஸ்வரன்

"தமிழகத்தின் உரிமைகளைக்கூட கேட்கிற  நிலையில் இல்லை என்ற பொழுது, இந்த ஆட்சி தொடர்வதில் எந்த  அர்த்தமும் கிடையாது. சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க கண்டிபாக வெற்றிபெறும். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழும்" என்று சூலூரில் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கொங்கு ஈஸ்வரன்

சூலூர் இடைத்தேர்தல் தொடர்பான கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஆலோசனைக் கூட்டம் சூலூரில் நடைபெற்றது. அப்போது, பத்திரிகையாளர்களைச் சந்தித்த கொ.ம.தே.க-வின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன், "மத்தியில் என்ன சொல்கிறார்களோ அதைச் செய்யக் கூடியவர்களாக இன்றைய தமிழக  ஆட்சியாளர்கள் உள்ளனர். இன்றைக்கு, தமிழகத்தில் வசூலாகின்ற ஜிஎஸ்டி வரியைக்கூட திரும்பிப் பெற முடியாத நிலையில்தான்  தமிழகத்தில் ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது.  இப்படிப்பட்ட ஆட்சியாளர்களால், தமிழகத்திற்கென்று  எதையும் பெற்றுத்தர முடியாது.  கஜா புயலின்போதுகூட எதையும் கொடுக்காத மத்திய அரசை, அழிந்துகொண்டிருக்கின்ற ஜவுளித்தொழிலைப் பாதுகாக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காத மத்திய அரசை, எதிர்த்து கேள்விகூட கேட்க தைரியம் இல்லாமல் தமிழக ஆட்சியாளர்கள் உள்ளனர்.

 தங்களைக் காப்பாற்றிக்கொள்வதற்காக பா.ஜ.க-வுடன் கூட்டணி போட்டார்களே ஒழிய, தமிழக மக்களைக் காப்பாற்றுவதற்காக அல்ல. தமிழக மக்களை இவர்களால் காப்பாற்ற முடியாது. மத்திய அரசிடம், தமிழகத்தின் உரிமைகளைக்கூட கேட்கின்ற  நிலையில் இல்லை என்ற பொழுது, இந்த ஆட்சி தொடர்வதில் எந்த  அர்த்தமும் கிடையாது. சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க கண்டிபாக வெற்றி பெறும். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழும்.  தமிழகத்திற்குத் தேவையான நிதி உதவிகளை மத்திய அரசிடம் கேட்டு வாங்கக்கூடிய  ஆட்சி தமிழகத்தில் அமையும்; அதைத்தான் மக்கள் எதிர்பார்க்கின்றனர். 

சூலூர் சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்தவரை விசைத்தறி தொழில் நடத்த முடியாத சூழலை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. இந்தப் பகுதியில் இருக்கின்ற மக்களைக் காப்பாற்ற தி.மு.க வெற்றிபெற வேண்டும். இங்கே, 3 ஆண்டுகளாக சட்டமன்ற உறுப்பினராக இருந்த கனகராஜ் என்ன செய்தார் என்பதை அ.தி.மு.க-வினர் சொல்ல முடியுமா? எதையும் செய்யாத ஒரு கட்சிக்கு திரும்பவும் வாக்கு கேட்கக்கூடிய தகுதி அவர்களுக்குக் கிடையாது. அ.தி.மு.க-விற்கு எதிராக வாக்களிக்க மக்கள் தயாராக உள்ளனர். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தி.மு.க-வை வெற்றிபெறவைக்க இரவு பகலாகப் பாடுபடுவோம்" என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க