`எந்த அரசியல்வாதியும் வரல, அதனால வாக்களிக்கல!'‍- மலைக் கிராமத்தில் ஆய்வுசெய்யும் அரசு அதிகாரிகள் | Officials in Mountain Village ignored elections

வெளியிடப்பட்ட நேரம்: 11:20 (26/04/2019)

கடைசி தொடர்பு:11:20 (26/04/2019)

`எந்த அரசியல்வாதியும் வரல, அதனால வாக்களிக்கல!'‍- மலைக் கிராமத்தில் ஆய்வுசெய்யும் அரசு அதிகாரிகள்

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், தேனி தொகுதியில் தேர்தலைப் புறக்கணித்த மலைக் கிராமத்தில், அரசு அதிகாரிகள் இன்று ஆய்வுசெய்கின்றனர்.

வாக்கு பதிவு எந்திரம் கொண்டு செல்லும் தேர்தல் அலுவலர்கள்

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி மலைப்பகுதியில் காரிப்பட்டி, கொழுக்குமலை, முதுவாகுடி, டாப் ஸ்டேஷன், சென்ட்ரல் ஸ்டேஷன், கொட்டக்குடி ஆகிய மலைக் கிராமங்கள் உள்ளன. இதில், சென்ட்ரல் ஸ்டக்‌ஷன் எனும் மலைக் கிராம மக்கள், நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணித்தனர். குரங்கணியில் இருந்து 7 கிலோ மீட்டர் தூரம் மலைப்பாதையில் நடந்துசென்றால், சென்ட்ரல் ஸ்டேஷன் கிராமத்தை அடையலாம். சுமார் 169 வாக்குகள் இருக்கும் இந்த மலைக் கிராமத்தில், அங்குள்ள ஆரம்பப் பள்ளியில் வாக்குச்சாவடி அமைத்திருந்தது, தேர்தல் ஆணையம்.

மலை கிராமத்துக்கு செல்லும் வாக்கு பதிவு எந்திரம்

தேர்தலுக்கு முந்தைய நாள், குதிரை மூலமாக வாக்குப்பதிவு இயந்திரம் உட்பட, தேர்தல் நடத்தத் தேவையான அனைத்துப் பொருள்களையும் கொண்டுசென்று, மறுநாள் தேர்தலின்போது, சென்ட்ரல் ஸ்டேஷன் கிராம மக்கள் ஓட்டளிக்க மறுத்துவிட்டனர். “இதுவரை எங்களை எந்த அரசியல்வாதியும் வந்து சந்தித்தது கிடையாது. எங்களுக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. அதனால் தான் நாங்கள் ஓட்டளிக்கவில்லை” என்றனர். மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான பல்லவி பல்தேவ், இத்தகவலை கேள்விப்பட்டு, சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு அதிகாரிகளை அனுப்பி சமரசம் பேசவைத்தார்.

மலை கிராமம்

ஆனால், அது பலிக்கவில்லை. முழுவதுமாக சென்ட்ரல் ஸ்டேஷன் கிராம மக்கள் தேர்தலைப் புறக்கணித்தனர். இச்சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், துணை ஆட்சியர் தலைமையிலான அரசு அதிகாரிகள் அடங்கிய குழு, சென்ட்ரல் ஸ்டேஷன் சென்று ஆய்வுசெய்ய இன்று காலை புறப்பட்டது. குரங்கணி வந்தடைந்த அக்குழு, மலைப்பாதையில் நடந்து, சென்ட்ரல் ஸ்டேஷன் அடைந்திருக்கிறது. அம்மக்களின் குறைகளைக் கேட்டறிந்துகொண்டிருக்கின்றனர். இந்த ஆய்வு எதற்காக, அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பதுகுறித்து கலெக்டர் தான் முடிவெடுப்பார் என்கின்றனர் அதிகாரிகள்.