அப்போலோ வழக்கில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு இடைக்காலத்தடை! | SC stays Arumugasamy commission probe into death of former TN CM Jayalalithaa 

வெளியிடப்பட்ட நேரம்: 12:27 (26/04/2019)

கடைசி தொடர்பு:12:29 (26/04/2019)

அப்போலோ வழக்கில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு இடைக்காலத்தடை!

உச்சநீதிமன்றம்


தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2016 செப்டம்பர் மாதம் 22-ம் தேதி இரவு திடீர் உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போலோ மருத்துவமனையில் 75 நாள்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் 2016 டிசம்பர் 5-ம் தேதி இரவு 11.30 மணிக்கு உயிரிழந்தார். ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக  தி.மு.க உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் சந்தேகம் கிளப்பியது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார். அதன்படி தமிழக அரசு 25.09.2017 அன்று, ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி கொண்ட ஒரு நபர் விசாரணை ஆணையம் ஒன்றை நியமித்தது. விசாரணை ஆணையத்தில் ஆஜராகுமாறு அப்போலோ மருத்துவர்கள், அரசு மருத்துவர்கள், ஜெயலலிதாவின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி பெருமாள் சாமி, ஐ.பி.எஸ் அதிகாரிகள் பலருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அவர்களும் விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கமளித்தனர். 

இந்தநிலையில் அப்போலோ மருத்துவமனை மருத்துவர்களின் சாட்சியம் தவறாகப் பதிவுசெய்யப்படுவதாகவும், இதன்காரணமாக ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்குத் தடைவிதிக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேலும் அந்த மனுவில் விசாரணை ஆணையத்தில் 21பேர் கொண்ட மருத்துவக்குழுவை அமைக்க அப்போலோ சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், அப்போலோ மருத்துவமனை கோரிக்கை தொடர்பாகப் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு இடைக்காலத்தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.