பத்து ரூபாய் நாணயங்கள் மூலம் டெபாசிட் தொகை - அதிகாரிகளை அலறவிட்ட சூலூர் சுயேச்சை வேட்பாளர் | Sulur by election: independent candidate Prabhakaran files nomination

வெளியிடப்பட்ட நேரம்: 15:45 (26/04/2019)

கடைசி தொடர்பு:13:11 (27/04/2019)

பத்து ரூபாய் நாணயங்கள் மூலம் டெபாசிட் தொகை - அதிகாரிகளை அலறவிட்ட சூலூர் சுயேச்சை வேட்பாளர்

சூலூர் தொகுதியில், சுயேச்சை வேட்பாளர் பிரபாகரன் பத்து ரூபாய் நாணயங்கள் மூலம் டெபாசிட் தொகை கட்டினார்.

சூலூர்  வேட்பாளர் பிரபாகரன்

கோவை சூலூர் சட்டமன்றத் தொகுதியில் மே 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் இன்று அநீதிக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் வேட்புமனுத்தாக்கல் செய்தார். வேட்புமனுத்தாக்கல் செய்வதற்காக, பொதுமக்களிடம் அவர் நிதியுதவி கேட்டிருந்தார். குறிப்பாக, 'ஒவ்வொரு மக்களும் தலா ஒரு ரூபாய் தந்தால்கூட போதும்' என்று அவர் சமூக வலைதளங்களில் கூறியிருந்தார். இதையடுத்து, பொது மக்களிடம் பெற்ற நிதியின் மூலம் சூலூர் தேர்தல் நடத்தும் அலுவலர் பாலகிருஷ்ணனிடம் இன்று வேட்புமனுத்தாக்கல் செய்தார். இதற்காக, கருமத்தம்பட்டி பகுதியிலிருந்து இருசக்கர வாகனத்தில் பேரணியாக வந்த பிரபாகரன், பத்து ரூபாய் நாணயங்கள் மூலம் டெபாசிட் தொகையான 10,000 ரூபாயை செலுத்தினார். ஒரு தட்டு நிறைய இருந்த அந்த நாணயங்களை சுமார் 7 அதிகாரிகள் எண்ணினார்கள்.

வேட்பு மனுத்தாக்கலுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பிரபாகரன், "அ.தி.மு.க ஆள் மாற்றத்துக்காகவும் தி.மு.க ஆட்சி மாற்றுத்துக்காகவும் போட்டியிடுகின்றன. நாங்கள் மக்களுக்காகப் போட்டியிடுகிறோம். ஜனநாயகம், பணநாயகம் ஆகிவிட்டது. ஆனால், நான் மக்களிடமிருந்து பணம் வாங்கித்தான் தேர்தலில் போட்டியிடுகிறேன். பத்து ரூபாய் நாணயத்தை எங்கும் வாங்குவதில்லை. பொதுமக்கள் இதனால் கடும் அவதிக்குள்ளாகுகின்றனர். எனவேதான், பத்து ரூபாய் நாணயம் (ஆயிரம் எண்ணிக்கை) மூலமாக டெபாசிட் தொகை செலுத்தினேன். சூலூர் மக்களின் அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றுவேன்" என்றார்.

நாம் தமிழர்

அதேபோல நாம் தமிழர் கட்சி சார்பாக வழக்கறிஞர் விஜயராகவன் மற்றும் மூன்று சுயேச்சை வேட்பாளர்கள் வேட்புமனுத்தாக்கல் செய்தனர்.