`டைம்பாஸுக்குத்தான் லவ் பண்ணேன்!’- காதலன் மிரட்டியதால் தற்கொலைக்கு முயன்ற மாணவி | The girl who tried to commit suicide because of boyfriend

வெளியிடப்பட்ட நேரம்: 15:15 (26/04/2019)

கடைசி தொடர்பு:15:15 (26/04/2019)

`டைம்பாஸுக்குத்தான் லவ் பண்ணேன்!’- காதலன் மிரட்டியதால் தற்கொலைக்கு முயன்ற மாணவி

‘‘டைம்பாஸுக்குத்தான் லவ் பண்ணினேன். திருமணம் செய்ய வற்புறுத்தினால் கொலை செய்துவிடுவேன்’’ என்று காதலன் மிரட்டியதால் மனமுடைந்த கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

காதலன் நவீன்குமார்

வேலூர் மாவட்டம், குடியாத்தத்தை அடுத்த ஐதர்புரத்தைச் சேர்ந்தவர் நவீன்குமார் (26). சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் கார் ஓட்டுநராக வேலை செய்துவருகிறார். இந்த நிலையில், குடியாத்தத்தில் உள்ள ஒரு கல்லூரியில் 19 வயது மாணவி ஒருவர் படித்து வருகிறார். அந்த மாணவியிடம் நவீன்குமார் காதலிப்பதாக கூறினார். மாணவியும் காதலை ஏற்றுக்கொண்டுள்ளார். இருவரும்  காதலித்துவந்தனர்.

இந்த நிலையில், `தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு' அந்த மாணவி வற்புறுத்தியதால் காதலன் நவீன்குமார் பேசுவதை தவிர்த்து விலகிச் சென்றார். மாணவி தொந்தரவு செய்ததால் ஆத்திரமடைந்த நவீன்குமார், ``உன்னையெல்லாம் திருமணம் செய்துகொள்ள முடியாது. டைம்பாஸுக்குத்தான் காதலித்தேன். பிரச்னை செய்யாமல் போய்விடு. இல்லையென்றால், கொலை செய்துவிடுவேன்’’ என்று மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

மனமுடைந்த மாணவி, குடியாத்தம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதைத்தொடர்ந்து, போலீஸ் நிலையத்துக்கு வெளியே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். உறவினர்கள் மாணவியை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அவர் சிகிச்சை பெற்றுவருகிறார். புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீஸார், காதலன் நவீன்குமாரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.