வேட்பாளருடன் சேர்ந்து 6 பேர்!- தி.மு.க வேட்பாளர் வேட்பு மனுத்தாக்கல் சர்ச்சை | Sulur Dmk candidate Pongalur Palanisamy files nomination

வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (26/04/2019)

கடைசி தொடர்பு:17:40 (26/04/2019)

வேட்பாளருடன் சேர்ந்து 6 பேர்!- தி.மு.க வேட்பாளர் வேட்பு மனுத்தாக்கல் சர்ச்சை

சூலூர் இடைத்தேர்தலில், தி.மு.க வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமி வேட்புமனுத்தாக்கல் செய்தபோது, அவருடன் 5 பேர் இருந்ததால் சர்ச்சை வெடித்துள்ளது.

தி.மு.க வேட்புமனுத்தாக்கல்

கோவை சூலூர் இடைத்தேர்தலில் தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமியும், அ.தி.மு.க சார்பில் கந்தசாமி என்பவரும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், பொங்கலூர் பழனிசாமி இன்று மதியம் வேட்புமனுத் தாக்கல் செய்தார். வேட்புமனுத் தாக்கல் செய்யும், சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நாம் தமிழர் சார்பில், வழக்கறிஞர் விஜயராகவன் மாட்டு வண்டியில் வந்து வேட்புமனுத் தாக்கல் செய்தார். ஆனால், அவருடைய வாகனத்தை 100 மீட்டருக்கு முன்பே போலீஸார் நிறுத்திவிட்டனர். இதனால், நாம் தமிழர் கட்சியினர் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, தி.மு.க வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமி வேட்புமனுத் தாக்கல் செய்ய வந்தபோது, அவருடன் சூலூர் தி.மு.க தேர்தல் பொறுப்பாளர்கள் எ.வ.வேலு, தென்றல் செல்வராஜ், எம்.எல்.ஏ நா.கார்த்தி உள்ளிட்ட பலர் வந்திருந்தனர். பொங்கலூர் பழனிசாமி வந்த கார், வட்டாட்சியர் அலுவலகத்தின் கேட் வரை அனுமதிக்கப்பட்டது. இதனால், நாம் தமிழர் கட்சியினர் போலீஸாருடன் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, ``எங்களுக்கு ஒரு நியாயம்? தி.மு.க-வுக்கு ஒரு நியாயமா? எங்களுடன் வந்தவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. ஆனால், தி.மு.க-வில் குறிப்பிட்ட எண்ணிக்கையைவிட அதிகமாக அனுமதிக்கின்றனர். போலீஸார் ஒரு தலைபட்சமாக நடந்து கொள்கின்றனர்" என்று நாம் தமிழர் கட்சியினர் குற்றம் சாட்டினர்.

இதையடுத்து, தி.மு.க-வினர் தேர்தல் நடத்தும் அலுவலர் பாலகிருஷ்ணன் அறைக்குச் சென்றனர். பொதுவாக, வேட்பு மனுத்தாக்கல் செய்ய வேட்பாளருடன் சேர்த்து 5 பேருக்குத்தான் அனுமதி உள்ளது. ஆனால், தி.மு.க-வில் வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமியுடன் சேர்த்து, எ.வ.வேலு, வழக்கறிஞர் பரந்தாமன், ஆதித்தமிழர் பேரவை அதியமான், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பிரமுகர் உட்பட 6 பேர் தேர்தல் அதிகாரியின் அறைக்குச் சென்று, வேட்புமனுத்தாக்கல் செய்தனர்.

ஆனால், தேர்தல் நடத்தும் அலுவலர் உட்பட எந்த அதிகாரியும் இதுகுறித்து கேள்வி எழுப்பாதது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.