`என் அப்பா, என் கோச் இறந்துட்டாங்க; இந்த வெற்றிக்கு என் அக்காதான் காரணம்!'- கண்ணீர்விட்ட `தங்க மங்கை' கோமதி | gomathi marimuthu talk about his career

வெளியிடப்பட்ட நேரம்: 17:28 (26/04/2019)

கடைசி தொடர்பு:18:10 (26/04/2019)

`என் அப்பா, என் கோச் இறந்துட்டாங்க; இந்த வெற்றிக்கு என் அக்காதான் காரணம்!'- கண்ணீர்விட்ட `தங்க மங்கை' கோமதி

`பயிற்சிக்கு அடித்தளமே மைதானம்தான். அப்படியான மைதானமே இல்லாமல் தடகளத்தில் தங்கம் வெல்வதில் உள்ள சிரமத்தை நம்மால் உணர முடியும். மிகப்பெரிய உழைப்பு ஒன்று அதற்கு தேவை. அந்த உழைப்பைக்கொட்டி, சாதித்திருக்கிறார், தமிழகத்தின் தங்க மகள் கோமதி மாரிமுத்து’. 

கோமதி மாரிமுத்து

23-வது சர்வதேச ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் நாட்டின் தோஹா நகரில் நடைபெற்றது. இதில் 800 மீட்டர் தடகளப் போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து, தங்கம் வென்றுள்ளார். தாயகம் திரும்பிய அவருக்கு, சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கோமதி மாரிமுத்து பேசுகையில், ``என் சொந்த ஊர் திருச்சி. நீங்கள் எனக்கு இவ்வளவு ஆதரவு கொடுப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

கோமதி

நான் பெங்களூரில் வருமானவரித்துறை அலுவலகத்தில் வேலை செய்கிறேன். ஏன் கர்நாடகத்தில் வேலை பார்க்குறீங்க அப்டினு நிறையபேர் கேட்டாங்க. எனக்கு தமிழ்நாட்டில் இருந்து வேலைபாக்கணும்தான் ஆசை. ஆனா எனக்கு தமிழ்நாட்டில் வேலை கிடைக்கல. தமிழ்நாட்டில் வேலைல இருந்து மெடல் ஜெயிச்சிருந்தா இன்னும் சந்தோஷப்பட்டிருப்பேன். தமிழக அரசு, சாதிக்கத்துடிக்கும் ஏழைப்பெண்களுக்கு உதவி செய்ய வேண்டும். நான் மிகக் கஷ்டப்பட்டு இந்த நிலைமைக்கு வந்துள்ளேன். இனி வரும் தலைமுறையினர் அப்படி கஷ்டப்படக் கூடாது. முதல்வர் எனக்கு வாழ்த்து தெரிவித்தார். திறமை இருப்பவர்களுக்கு அரசு உதவ வேண்டும். பிராக்டீஸ் பண்றதுக்கு எனக்கு எந்த வசதியும் இல்ல. லைட், பஸ் எந்த வசதியும் இல்ல.

கோமதி

என்ன மாதிரி கிராமத்திலிருந்து வருபவர்களுக்கு, அடிப்படை வசதிகளை அரசு செய்துதர வேண்டும். தமிழக அரசு உதவினால், ஒலிம்பிக் போட்டியில் நிச்சயம் தங்கம் வெல்வேன். 8 வருடமாக நான் தொடர்ந்து பயிற்சி செய்துவருகிறேன். என் அப்பா இறந்து, என் கோச் இறந்துவிட்டார். என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தபோது, எனக்கு உதவியர் என் அக்காதான். யாரிடம் பேசி எப்படி போட்டிக்குள் நுழைவது உள்ளிட்ட அனைத்தையும் அவர்தான் பார்த்துக்கொண்டார். அவர் இல்லாவிட்டால் என்னால் இந்த சாதனையை நிகழ்த்திக்காட்டியிருக்க முடியாது. மைதானமே இல்லாமல், பயிற்சி பெற வழியில்லாமல் தவித்தபோது, ராஜாமணி சார் உதவினார்” என்றார். பின்னர் தனியார் பள்ளி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட கோமதி, பேசுகையில், தன்னையும் மீறி கண்கலங்கி விட்டார். `எனக்கு சாப்பாடு வேண்டும் என்பதற்காக மாட்டுக்கு வைக்கும் உணவைக்கூட என் அப்பா சாப்பிடுவார். அவர்தான் எனக்கு அனைத்துமாக இருந்தார். அவர் உயிரோடியிருந்திருந்தால், நான் தங்கம் வாங்கியதைக்கண்டு மகிழ்ந்திருப்பார்.2 ஆண்டுகள் சாப்பாடுக்கே கஷ்டப்பட்டதால், பயிற்சியைக்கூட நிறுத்திவைத்திருந்தேன்” என்றார்.