`ஒரு கம்பு, ஒரு குச்சி, இரண்டு ஆணிகள்!'- மக்களை பதறவைக்கும் மின்வாரிய ஊழியர்கள் | Tiruvallur people complain about EB line

வெளியிடப்பட்ட நேரம்: 17:41 (26/04/2019)

கடைசி தொடர்பு:17:41 (26/04/2019)

`ஒரு கம்பு, ஒரு குச்சி, இரண்டு ஆணிகள்!'- மக்களை பதறவைக்கும் மின்வாரிய ஊழியர்கள்

ரயில் நகர் செல்லும் சாலை

திருவள்ளுர் மாவட்டம் பெருமாள்பட்டில் மின்கம்பம் உடைந்து ஒரு மாதம் ஆகிறது. மின்கம்பத்துக்குப் பதிலாக ஒரு கம்பை நட்டு அதில் நடுவில் ஒரு குச்சியை வைத்து மின்கம்பியை வைத்துள்ளனர் மின்சார வாரிய ஊழியர்கள். ``உயிர் பலி வாங்கும் முன் மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அந்தப் பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

மின்கம்பமான மரம்

திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டு பகுதிக்கு உட்பட்ட பெருமாள்பட்டு கிராமத்தில் ரயில் நகர் உள்ளது. இந்தக் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். சென்னை, திருவள்ளூர், அம்பத்தூர், ஆவடி உள்ளிட்ட பகுதிகளுக்கு இந்த மக்கள் தினந்தோறும் கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் வேலைக்குச் சென்று வருகின்றனர். இந்த நிலையில், ஒரு மாதத்துக்கு முன் ரயில் நகர் செல்லும் சாலையின் அருகில் மின்கம்பம் திடீரென முறிந்துவிழுந்தது. இந்தச் சாலையில்தான் மக்கள் நடைப்பயிற்சிக்கு செல்வார்கள். மின்கம்பம் திடீரென சாலையில் முறிந்துவிழுந்ததால் அந்த நேரத்தில் யாரும் வராததால் உயிர் பலி ஏற்படவில்லை. மின்கம்பம் முறிந்து கிடந்தது குறித்து பொதுமக்கள் மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

கீழே விழுந்துக்கிடக்கும் மின்கம்பம்

இதைத் தொடர்ந்து அங்கு வந்த மின்வாரிய ஊழியர்கள், சாலையில் கிடந்த மின்கம்பியை ஓரமாக தூக்கிப்போட்டனர். பின்னர், குழிதோண்டி ஒரு கம்பை எடுத்து மின்கம்பம் இருந்த இடத்தில் நட்டனர். அந்த கம்பின் நடுவில் பருமனமான குச்சியை எடுத்து நடுவில் ஆணியை அடித்தனர். இதைத் தொடர்ந்து அந்த குச்சியின் வலது, இடது பக்கத்தில் இரண்டு ஆணிகளை அடித்தனர். பின்னர் தாழ்வாக கிடந்த மின்கம்பியை எடுத்து ஆணியின் அருகில் மாட்டினர். இதையடுத்து மின் சப்ளை கொடுக்கப்பட்டது. இந்தச் சம்பவம் நடந்து ஒரு மாதத்துக்கு மேல் ஆகிறது. ஆனால், தற்போதுவரை மின்கம்பம் சரி செய்யப்படவில்லை. மிகவும் தாழ்வாக கிடக்கும் மின்கம்பி பலமான காற்று அடித்தால் கீழே விழுந்துவிடும். இந்த அளவுக்கு அபாயகரமான வேலையை மின் ஊழியர்கள் செய்துள்ளனர். சாலையில் நடந்து செல்வோர், கார், வாகனத்தில் செல்வோர் உயிரை கையில் பிடித்துச் செல்கின்றனர்.

மின்கம்பம்

இந்த அபாயகரமான மின்கம்பம் குறித்து அந்தப் பகுதியை கவனித்து வரும் மின்வாரிய ஊழியர் மகேந்திரனிடம் கேட்டபோது, ``கம்பம் இல்லாததால் அப்படி வைத்திருக்கிறோம். கம்பம் வந்தவுடன் சரி செய்துவிடுவோம்" என்று கூறியவர், நான் இப்போது புட்லூர் ஏரியா பார்க்கிறேன். ரயில்நகர் ஏரியாவை பார்க்க இரண்டு பேர் இருக்கிறார்கள் என்றதோடு, மின்சார ஊழியர் மோகன் என்பவரின் செல்போன் நம்பரைக் கொடுத்தார். அந்த நம்பரை தொடர்புகொண்டால் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது என்று வந்தது.

இதைத் தொடர்ந்து பெருமாள்பட்டு துணை நிலைப் பொறியாளர் குணசேகரனிடம் பேசினேன். ``கான்ட்ராக்டர்கள் வேலைக்கு வரவில்லை. செவ்வாய்க்கிழமைதான் வந்திருக்கிறார்கள். சீக்கிரத்தில் சரி செய்துவிடுவோம்" என்று முடித்துக்கொண்டார்.

ஒரு வருடமாக பயன்படுத்தப்படாமல் இருக்கும் மின்கம்பம்

கீழே விழுந்துகிடக்கும் மின்கம்பம் அருகில் இரண்டு மின்கம்பங்கள் நடப்பட்டுள்ளன. இந்தக் கம்பங்கள் நடப்பட்டு ஒரு வருடத்துக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால், இதுவரைக்கும் பயன்படுத்தப்படாமல் அப்படி கிடக்கிறது. இந்த மின்கம்பத்தை நடும்போது, அங்கு டிரான்ஸ்பார்மர் வருகிறது என்று மின்வாரிய ஊழியர்கள் தெரிவித்தனர். தற்போது, கேட்பாரற்றுக்கிடக்கிறது.