`16 ஆண்டுகள் ஆச்சு, பதவி உயர்வு கிடைக்கல!' விரக்தியில் பதவியை துறக்க சென்னை இன்ஸ்பெக்டர் முடிவு | Chennai inspector decided to resign over not getting promotion for sixteen years

வெளியிடப்பட்ட நேரம்: 18:10 (26/04/2019)

கடைசி தொடர்பு:18:10 (26/04/2019)

`16 ஆண்டுகள் ஆச்சு, பதவி உயர்வு கிடைக்கல!' விரக்தியில் பதவியை துறக்க சென்னை இன்ஸ்பெக்டர் முடிவு

சென்னை மாதவரம் காவல்நிலையத்தில் சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர் பொறுப்பு வகித்துவரும் ஜவஹர் ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார். கடந்த 16 வருடங்களாகப் பதவி உயர்வு கிடைக்காத விரக்தியின் காரணமாகவே அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக அறிவித்திருப்பது காக்கிகள் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

ஆணையாளருடன் இன்ஸ்பெக்டர் ஜவஹர்


சென்னை மாதவரம் காவல்நிலையத்தில் சட்டம் -ஒழுங்கு பிரிவின் காவல் ஆய்வாளராக இருப்பவர், ஜவஹர். 1997-ம் ஆண்டு காவல் துறையில் உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்த அவர், கடந்த 12 ஆண்டுகளாக சென்னையில் உள்ள திருவான்மியூர், ஆர்.கே.நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணியாற்றி தற்போது மாதவரம் ஸ்டேஷனில் பணியாற்றி வருகிறார். 

பதவி உயர்வு கிடைக்காத அதிருப்தி!

ஆய்வாளர் ஜவஹர் தமிழக காவல்துறைக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிக்கும் தனிப்படையில் இவர் பணியாற்றினார். அதன் காரணமாக 2004-ம் ஆண்டு, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இவருக்கு விருது வழங்கினார். அத்துடன், மூன்று லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு, வீட்டுமனை மற்றும் பதவி உயர்வு ஆகியவை கிடைத்தன. அதனால் ஜவஹர் ஆய்வாளராகப் பதவி உயர்வு பெற்று சிறப்பாகச் செயல்பட்டு வந்தார். 

ஆனால், வழக்கமாகக் காவல்துறையில் நடைமுறைப்படுத்தப்படும் பதவி உயர்வு கிடைக்காமல் கடந்த 15 வருடங்களாக ஆய்வாளராகவே பொறுப்பு வகித்து வருகிறார். தனக்கும் தன்னைப் போன்ற சிலருக்கும் பதவி உயர்வு கிடைக்காதது தொடர்பாகப் பலமுறை உயரதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை. அதனால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழக அரசு உரிய விதத்தில் பரிசீலித்து பதவி உயர்வு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனாலும்கூட அவருக்கு நிவாரணம் கிடைக்கவில்லை. இன்ஸ்பெக்டர் ஜவஹருக்குக் கீழ் பணியாற்றிய சிலர், பதவி உயர்வு பெற்று டி.எஸ்.பி ஆகிவிட்ட நிலையில், அவர்களுக்கு சல்யூட் அடிக்க வேண்டிய நிலையில் ஜவஹர் இருப்பது அவருக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது.  
 

டுவிட்டர் பதிவு

ராஜினாமா முடிவு!

பல வருடங்களாகப் பதவி உயர்வு கிடைக்காததால் அதிருப்தியடைந்த இன்ஸ்பெக்டர் ஜவஹர், தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட அவர், ``முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் விருது வழங்கிப் பாராட்டப்பட்ட என்னைப் போன்ற காவல்துறையைச் சேர்ந்தவர்கள், அரசுத் துறையில் உள்ள சில அதிகாரிகளால் அவமானப்படுத்தப்படுகிறோம். எங்களுடைய நிலை குறித்து உள்துறைச் செயலாளர் மற்றும் முதல்வரின் கவனத்துக்குக் கொண்டுசெல்லாமல் சில அதிகாரிகள் எங்களை அவமானப்படுத்துகிறார்கள். 

அதனால் எனது பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளேன். அத்துடன் அரசு கொடுத்த விருது, ரொக்கப்பணம் மற்றும் வீட்டுமனையையும் திருப்பி ஒப்படைக்க உள்ளேன்’’ எனப் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு காரணமாக அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். பொதுத்தளத்தில் காவல்துறை பற்றிப் பதிவிட்டிருப்பதால் அவரிடம் விளக்கம் கேட்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். ஆனாலும், ஆய்வாளர் ஜவஹரின் முடிவால் காக்கிகள் வட்டாரத்தில் பரபரப்பான விவாதம் நடைபெற்று வருகிறது. 
 

மாரத்தான் ஓட்டத்தில் ஆய்வாளர் ஜவஹர்


இன்ஸ்பெக்டர் ஜவஹர் கதை!

நெல்லை மாவட்டம், பாவூர்சத்திரத்தைச் சேர்ந்தவர், ஜவஹர். இவரின் மனைவி சந்திரகலா. இவர்களுக்கு மகனும் மகளும் உள்ளனர். ஜவஹரின் மகன் விஷுவல் கம்யூனிகேசன் முடித்துவிட்டு டெல்லியில் பணியாற்றி வருகிறார். மகள் காஞ்சிபுரத்தில் மருத்துவப் படிப்பு படித்துவருகிறார். பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியில் படித்துவிட்டு சென்னையில் சட்டப்படிப்பு முடித்த அவர் பன்னாட்டு நிறுவனங்களில் உயர் பதவிகளில் இருந்த நிலையில், காவல்துறை மீதிருந்த பிடிப்பு காரணமாக சப்-இன்ஸ்பெக்டராகத் தேர்வானார்.

படிக்கும் காலத்திலேயே விளையாட்டுகளில் ஆர்வத்துடன் செயல்பட்டார். என்.சி.சி-யில் இடம்பெற்றிருந்தார். துப்பாக்கி சுடும் போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்று பல பரிசுகளை வென்றுள்ளார். காவல்துறையில் சேர்ந்த பின்னரும் அதே வேகத்துடன் செயல்பட்டார். சென்னையில் அவர் பணியாற்றியபோது ரவுடிகளுக்குச் சிம்மசொப்பனமாகத் திகழ்ந்தார். பிரபல ரவுடிகளான ஆர்.கே.நகர் பாபா சுரேஷ், மகாகவி பாரதி நகரைச் சேர்ந்த சுறா சுரேஷ் என ரவுடிகள் என்கவுண்டர் செய்யப்பட்டபோது அதில் பங்கேற்றவர். வீரப்பன் சுட்டுக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் நான்கு பேரை என்கவுண்டர் செய்த சம்பவத்திலும் இவர் இடம்பெற்றிருந்தார். 

ஜவஹர்


கடந்த ஆண்டு ஒன்றரைக் கிலோ தங்கத்தைக் கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையரை ஆந்திராவுக்கு விரட்டிச் சென்று அவர்கள் ரயிலில் செல்லும்போதே பிடித்ததுடன், தங்கத்தையும் மீட்டு வந்தார். துப்புத் துலக்க முடியாத சிக்கலான வழக்குகளைக்கூட திறமையாக முடித்து அதிகாரிகளின் பாராட்டைப் பெற்றார். கடந்த ஆண்டு மோடி வருகையை எதிர்த்து தி.மு.க-வினர் ஆர்ப்பாட்டம் நடத்தியபோது, கிண்டியில் தி.மு.க தொண்டர் ஒருவர் அங்கிருந்த பாதுகாப்புச் சுவர் இல்லாத கிணற்றில் தவறி விழுந்தார். உடனடியாக தனது உடையுடன் கிணற்றில் குதித்த இன்ஸ்பெக்டர் ஜவஹர், அந்த நபரின் உயிரைக் காப்பாற்றிப் பாராட்டை பெற்றார். 

திறமை வாய்ந்த இன்ஸ்பெக்டர் எனப் பெயரெடுத்த ஜவஹர், ராஜினாமா செய்ய முடிவு செய்திருப்பது தனிப்பட்ட விதத்தில் அவருக்கு இழப்பு என்றபோதிலும் காவல்துறைக்கும் பேரிழப்பாகவே அமையும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். அதனால் காவல்துறை அதிகாரிகள் விரைவாக நல்ல முடிவெடுத்து ஜவஹர் போன்று மன உளைச்சலில் இருக்கும் பிற அதிகாரிகளின் குறைகளைக் களைய முன்வர வேண்டும்.