`கருணையுள்ள சிறுவன்’ - 10 ரூபாயுடன் மருத்துவமனை சென்று கோழிக்குஞ்சை காப்பாற்ற துடித்த சிறுவனுக்கு விருது | Mizoram Boy got Compassionate Kid' Award

வெளியிடப்பட்ட நேரம்: 18:41 (26/04/2019)

கடைசி தொடர்பு:18:41 (26/04/2019)

`கருணையுள்ள சிறுவன்’ - 10 ரூபாயுடன் மருத்துவமனை சென்று கோழிக்குஞ்சை காப்பாற்ற துடித்த சிறுவனுக்கு விருது

தவறுதலாக தனது சைக்கிளில் சிக்கிய கோழிக்குஞ்சைக் காப்பாற்ற பத்து ரூபாயுடன் மருத்துவமனைக்குச் சென்ற மிசோரம் சிறுவனுக்கு விருது கொடுத்து கௌரவப்படுத்தியுள்ளது பீட்டா அமைப்பு

சிறுவன்

மிசோரம் மாநிலத்தின் சாய்ராங் பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுவன் டெரக் (Derek). அவன், தனது சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது,  பக்கத்து வீட்டு கோழிக்குஞ்சு குறுக்கே வந்துவிட்டது. உடனடியாக பிரேக் பிடிக்க முடியாத சிறுவன், கோழிக்குஞ்சு மீது சைக்கிளை ஏற்றிவிட்டான். கோழிக்குஞ்சு துடித்ததைப் பார்த்து சிறுவன் பதறிவிட்டான். அடிபட்ட கோழிக்குஞ்சை தூக்கிக்கொண்டு, அருகில் இருந்த மருத்துவமனைக்குச் சென்றுள்ளான். தன்னிடம் இருந்த பத்து ரூபாயைக் கையில் எடுத்து, அங்கிருந்த நர்ஸிடம் நீட்டினான்.

சிறுவன்

`கோழிக் குஞ்சை எப்படியாச்சு காப்பாத்துங்க' என்று கெஞ்சியுள்ளான். அந்தக் கோழிக்குஞ்சு, ஏற்கெனவே இறந்துவிட்டதாக நர்ஸ் கூறியபோதும் அதை ஏற்க அவன் மனம் மறுத்தது. அங்கேயே முகத்தில் பரிதவிப்புடன் நின்றுகொண்டிருந்தான். அதைப் பார்த்து நெகிழ்ந்துபோன நர்ஸ், அந்தக் காட்சியைப் புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு, அதில் சிறுவனைப் பாராட்டியிருந்தார். இது சமூகவலைதளங்களில் வைரலானது. அவரது இந்தச் செயலை பலரும் வியந்து பாராட்டினர். அப்பாவியான சிறுவனின் செயல் லட்சக்கணக்கானோர் மனங்களைக் கொள்ளை கொண்டது. சிறுவனின் உயர்ந்த உள்ளத்தை கௌரவிக்கும் விதமாக அவனது பள்ளியில், அவனுக்கு சால்வை அணிவித்து விருது வழங்கி கௌரவித்துள்ளனர்.

சிறுவன்

அந்தப் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகின. இந்தநிலையில், விலங்குகளைப் பாதுகாக்கும் பீட்டா அமைப்பு சார்பில் சிறுவனுக்கு விருது ஒன்று வழங்கப்பட்டுள்ளது. `கருணையுள்ள சிறுவன்’ என்ற பெயரில் சிறுவனுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே சிறுவன் டெரக் தன் கையில் கோழிக்குஞ்சைப் பிடித்தபடி நிற்கும், பெயின்ட்டிங் புகைப்படம் ஒன்றும் வைரலாகி வருகிறது. இதை கேரளாவைச்சேர்ந்த சுனில் என்பவர் வரைந்துள்ளார். `யுவர் கிரெட் டெரக்’ என்று தலைப்பிட்டுள்ளார்.