`தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் மீது நடவடிக்கை?' - அ.தி.மு.க கணக்கும் தி.மு.க பதிலும் | Action against dmk mlas is not easy says R. S. Bharathi

வெளியிடப்பட்ட நேரம்: 18:52 (26/04/2019)

கடைசி தொடர்பு:19:24 (26/04/2019)

`தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் மீது நடவடிக்கை?' - அ.தி.மு.க கணக்கும் தி.மு.க பதிலும்

குட்கா பாக்கெட்களை சட்டமன்றத்துக்குள் கொண்டுசென்ற விவகாரத்தில் தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் மீது நடவடிக்கை எடுப்பது அவ்வளவு ஈஸி அல்ல...” என்கிறார், தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி.

குட்கா பாக்கெட்களை சட்டமன்றத்துக்குள் கொண்டுசென்ற விவகாரத்தில் தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் மீது நடவடிக்கை எடுப்பது அவ்வளவு ஈஸி அல்ல...” என்கிறார், தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி.

தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்

``மத்தியில் பி.ஜே.பி ஆட்சியும், மாநிலத்தில் அ.தி.மு.க ஆட்சியும் அகற்றப்படும்“ என்று தேர்தல் பிரசாரத்தின்போது மேடைதோறும் முழங்கிவந்த தி.மு.க தலைவர் ஸ்டாலின், ``நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு மத்தியில் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி உருவான அடுத்த நிமிடமே எடப்பாடி பழனிசாமி ஆட்சி அகற்றப்படும்” என்று பேசிவந்தார். 

இந்தநிலையில், நடந்துமுடிந்துள்ள 18 சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தல் மற்றும் நடைபெறவிருக்கும் 4 சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தல் ஆகியவற்றில் அதிகளவில் வெற்றிபெற்று தி.மு.க-வின் பலம் அதிகரிக்கும் சூழல் வந்துவிட்டால் ஆட்சிக்கு ஆபத்து என்று அ.தி.மு.க கருதுகிறது. இந்நிலையில், ஆட்சியைத் தக்கவைப்பதற்கான நடவடிக்கையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பு தொடங்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தடைசெய்யப்பட்ட குட்கா போதைப்பொருளை விற்பனை செய்வதற்காக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், காவல்துறை ஆணையர், டி.ஜி.பி உள்ளிட்டோருக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுக்கப்பட்டதாகப் புகார் கிளம்பியது. அதையொட்டி, தி.மு.க தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் சட்டசபைக்குள் குட்கா பாக்கெட்களைக் கொண்டுவந்து பிரச்னையைக் கிளப்பினர். அது தொடர்பாக, ஸ்டாலின் உள்ளிட்ட 21 தி.மு.க எம்.எல்.ஏ-க்களுக்கு எதிராக உரிமை மீறல் நடவடிக்கை எடுக்குமாறு உரிமைக்குழுவுக்கு சபாநாயகர் தனபால் பரிந்துரை செய்தார். அதையடுத்து, 21 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதை எதிர்த்து 21 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். தி.மு.க சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபல் வாதாடினார். தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தற்போது தமிழகத்தில் உள்ள 38 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றுள்ளது. மேலும், நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் 21 பேர் மீது நடவடிக்கை எடுப்பதற்கான சட்ட ரீதியான நடவடிக்கைகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பு மேற்கொள்ள ஆரம்பித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து தி.மு.க-வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் கேட்டபோது, ``இந்த விவகாரத்தில் தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் மீது நடவடிக்கை எடுப்பது சுலபமல்ல. தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு உயர் நீதிமன்றமே தடை விதித்துள்ளது. இதைத் தாண்டி அவர்களால் என்ன செய்ய முடியும். எதுவாக இருந்தாலும் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


அதிகம் படித்தவை