`கர்நாடக மாநில டி.ஜி.பி அளித்த தகவல்’ - பாம்பன் பாலத்தில் வெடிகுண்டு சோதனை! | Terrorist attack in Tamil Nadu Police bomb explosion at Pamban Bridge

வெளியிடப்பட்ட நேரம்: 08:30 (27/04/2019)

கடைசி தொடர்பு:10:36 (27/04/2019)

`கர்நாடக மாநில டி.ஜி.பி அளித்த தகவல்’ - பாம்பன் பாலத்தில் வெடிகுண்டு சோதனை!

பாம்பன் பகுதியில் தீவிரவாதிகள் நாச வேலைகளில் ஈடுபட ஊடுருவியுள்ளதாக  வந்த தகவலை அடுத்து பாம்பன் ரயில் மற்றும் சாலை பாலங்களில் போலீஸார் மோப்ப நாய் உதவியுடன்  சோதனை மேற்கொண்டனர்.

தீவிரவாதிகள் நாசவேலை குறித்து பாம்பன் பாலத்தில் சோதனை மேற்கொண்ட போலீஸார்


கடந்த ஞாயிற்றுக் கிழமை ஈஸ்டர் திருநாளன்று  இலங்கையில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதல்களில் 250-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இந்தக் கொடூர சம்பவத்தை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் நடத்தியதாகப் பொறுப்பேற்றுள்ளது. இதையடுத்து, இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்புடையவர்கள் இந்திய கடல் பகுதியில் ஊடுருவக் கூடும் என்பதால் இலங்கையை ஒட்டிய இந்திய கடல் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், தமிழகத்தில் நாச வேலைகளில் ஈடுபடத் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாகக் கர்நாடக மாநில டி.ஜி.பி, தமிழக டி.ஜி.பி-க்கு தகவல் அனுப்பியுள்ளார். பெங்களூர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு லாரி ஓட்டுநர் ஒருவர் இது குறித்து தகவல் தெரிவித்ததாகவும், குறிப்பாக ராமநாதபுரம் பகுதியில் 15-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாகவும், இவர்கள் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நாச வேலைகளில் ஈடுபட வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பாக ரயில்களில் நாச வேலைகளில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளதாகவும் அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது.

தீவிரவாதிகள் குறித்து போலீஸார் பாம்பன் பாலத்தில் சோதனை
 

இதையடுத்து, தமிழக அரசு முதன்மைச் செயலாளர் காவல்துறை டி.ஜி.பி, ரயில்வே துறை டி.ஜி.பி மற்றும் மாவட்ட ஆட்சியர்கள், ஐ.ஜி-க்கள் உள்ளிட்டோருக்கு இது தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு கடிதம் அனுப்பியுள்ளார். இது தொடர்பான தகவல் நேற்று மாலை ராமநாதபுரம் மாவட்ட காவல் துறையினருக்கு வந்தது.

இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா தலைமையில் ஏராளமான போலீஸார் பாம்பன் ரயில் பாலம் மற்றும் அன்னை இந்திராகாந்தி சாலை பாலம் ஆகியவற்றில் திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்தப் பாலங்கள் இரண்டிலும் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதா என மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவிகள் கொண்டு சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் வெடிகுண்டுகள் ஏதும் சிக்கவில்லை. இதைத் தொடர்ந்து ராமேஸ்வரத்தில் உள்ள தங்கும் விடுதிகள், ரயில் நிலையம், பேருந்து நிலையம் ஆகியவற்றில் இரவு முழுக்க சோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.