`மே 1-ல் கோடை விழா தொடங்கும்; 3 கண்காட்சிகள் ரத்து!- நீலகிரி கலெக்டர் திவ்யா தகவல் | Nilgiri Summer Festival

வெளியிடப்பட்ட நேரம்: 11:10 (27/04/2019)

கடைசி தொடர்பு:11:10 (27/04/2019)

`மே 1-ல் கோடை விழா தொடங்கும்; 3 கண்காட்சிகள் ரத்து!- நீலகிரி கலெக்டர் திவ்யா தகவல்

கோடை விழா நடத்துவது குறித்து கலெக்டர் திவ்யா ஆலோசனை

கொளுத்தும் கோடை வெயிலில் இருந்து தப்பிக்க சுற்றுலாத் தலங்கள் நிறைந்த கோடை வாசஸ்தலமான நீலகிரி மாவட்டத்துக்கு  ஏப்ரல்,  மே  இரண்டு மாதங்கள்  ஊட்டிக்குச் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்து செல்வது வழக்கம். பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஆண்டுதோறும் மே 1-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை கோடை விழா நடத்துவது வழக்கம். தோட்டக்கலைத்துறையினர் சார்பில் காய்கறி, ரோஜா, மலர் கண்காட்சி, பழக் காட்சி ஆகியவை நடத்தப்பட்டு வருகிறது. இதைக் காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்துச் செல்வார்கள். இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் நடந்த நிலையில், தேர்தல் விதிகள் நடைமுறையில் உள்ளதால் மலர் கண்காட்சி மற்றும் பழக் கண்காட்சி மட்டுமே நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. கோடை விழா தொடங்கும் தேதி வெளியிடப்படாமல் இருந்தது.

ஊட்டியில் நடந்த கோடை விழா ஆலோசனை கூட்டம்

தற்போது கோடை விழா நடத்துவது குறித்து அனைத்துத்துறை அதிகாரிகளுடன்  ஊட்டியில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் ஆட்சித்தலைவர் இன்னசென்ட் திவ்யா கலந்துகொண்டு விழா நடத்துவது குறித்து அதிகாரிகளுடன் விவாதித்தார். இதைத்தொடர்ந்து, ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, ``ஆண்டுதோறும் ஊட்டியில் கோடை விழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த முறை தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் உள்ளதால், பெரும்பாலான அதிகாரிகள் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, அனைத்து நிகழ்ச்சிகளையும் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், வழக்கம்போல், கோடை விழா வரும் மே மாதம் 1-ம் தேதி தொடங்கும்.

கலெக்டர் இன்னசென்ட் திவ்யா

தொடர்ந்து நாள்தோறும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கும். தேர்தல் பணிகள் தொடரும் நிலையில், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால், காய்கறி கண்காட்சி, ரோஜா கண்காட்சி, வாசனைத் திரவிய கண்காட்சி ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன. வழக்கம்போல், மே 17-ம் தேதி தொடங்கி 5 நாள்கள் மலர் கண்காட்சி நடக்கும். மலர் கண்காட்சியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து, நிறைவு விழாவிலும் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கவுள்ளார். குன்னூரில் வழக்கம் போல், மே மாதம் பழக் கண்காட்சி 25-ம் தேதி தொடங்கி இரு நாள்கள் நடக்கும்" என்றார்.