வன்கொடுமை செய்து 16 வயது சிறுமியைக் கொன்று கால்வாயில் வீசிய தொழிலாளி!- 5 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு | Cuddalore Court Judgement News

வெளியிடப்பட்ட நேரம்: 11:40 (27/04/2019)

கடைசி தொடர்பு:11:40 (27/04/2019)

வன்கொடுமை செய்து 16 வயது சிறுமியைக் கொன்று கால்வாயில் வீசிய தொழிலாளி!- 5 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு

கடலூர் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்த வழக்கில் மீன்பிடி தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கடலூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வன்கொடுமை செய்த அன்புதாஸ்

கடலூர் மாவட்டம், கிள்ளை அருகே உள்ள எம்.ஜி.ஆர். திட்டைச் சேர்ந்தவர் ஜானி என்கிற அன்புதாஸ் (45). இவர் மீன் பிடி தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 2014-ம் ஆண்டு சீர்காழி பகுதிக்கு மீன் பிடிக்கச் சென்றபோது மீன் வலை பின்னும் 40 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அந்தப் பெண் வீட்டுக்குச் சென்ற அன்புதாஸ், தாய் மற்றும் அவரின் 16 வயது மகளுடன் பழகி வந்துள்ளார். இந்த நிலையில், சிறுமியின்  தாயார் வீடு கட்டுவதற்கு அன்புதாஸிடம் 50,000 ரூபாய் கேட்டுள்ளார். அதற்கு அன்புதாஸ், `பணம் தருகிறேன், உன் மகளை என்னுடன் அனுப்பு' என நிபந்தனை விதித்துள்ளார். இதற்குச் சம்மதித்து தன் மகளை 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் 18-ம் தேதி அன்புதாஸுடன் அனுப்பியுள்ளார்.

பின்னர் அன்புதாஸ், சிறுமியை கடலூருக்கு அழைத்து வந்து தனியார் விடுதியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதைத் தொடர்ந்து அதே ஆண்டு ஜூலை மாதம் 3-ம் தேதி அவரது கிராமத்தில் நின்றிருந்த சிறுமியை மீண்டும் கடலூருக்கு அழைத்து வந்து தனியார் விடுதியில் 5 நாள்கள் தங்கவைத்து பாலியல் வன்கொடுமை செய்து, 8-ம் தேதி எம்.ஜி.ஆர். திட்டுக்கு அழைத்துச் சென்றபோது, சிறுமி வீட்டுக்கு அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளார்.

இதில் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த அன்புதாஸ், சிறுமியை கட்டையால் தாக்கியும், கழுத்தை நெரித்தும் கொலை செய்து, உடலை வாய்க்காலில் வீசினார். இது குறித்து தகவலறிந்த கிள்ளை போலீஸார் வழக்கு பதிவு செய்து அன்புதாஸை கைது செய்தனர். இந்த வழக்கு கடலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி லிங்கேஸ்வரன், பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்கு அன்புதாஸுக்கு ஒரு ஆயுள் தண்டனையும், கொலை செய்த குற்றத்துக்கு ஒரு ஆயுள் தண்டனையும் 85,000 ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார். தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார். அரசு தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் செல்வபிரியா ஆஜரானார்.