`பெண்களை வன்கொடுமை செய்தேன்; வீடியோவும் எடுத்தேன்!'- திருநாவுக்கரசுவின் கூட்டாளி அதிர்ச்சி வாக்குமூலம் | Pollachi case Criminals statement regarding sexual abuse

வெளியிடப்பட்ட நேரம்: 14:39 (27/04/2019)

கடைசி தொடர்பு:14:39 (27/04/2019)

`பெண்களை வன்கொடுமை செய்தேன்; வீடியோவும் எடுத்தேன்!'- திருநாவுக்கரசுவின் கூட்டாளி அதிர்ச்சி வாக்குமூலம்

பொள்ளாச்சி வழக்கு மணிகண்டன்

கோவை பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக, மணிவண்ணன் கொடுத்துள்ள ஒப்புதல் வாக்குமூலத்தையடுத்து, இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஐந்து பேர் மீதும் புதிதாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து வழக்கை அடுத்தகட்டத்துக்கு நகர்த்தியுள்ளது சி.பி.சி.ஐ.டி போலீஸ்.

கடந்த பிப்ரவரி 24-ம் தேதி, பொள்ளாச்சியில் காதல் என்ற பெயரில் கல்லூரி பெண் ஒருவரை காரில் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்து வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் தமிழக அளவில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஸ், வசந்தகுமார் ஆகிய நான்குபேர் மீதும் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டனர். அடுத்த சில நாள்களிலேயே இந்தக் கும்பல் தொடர்பான சில வீடியோக்களும் வெளியாகி, இதில் அரசியல் புள்ளிகளுக்குத் தொடர்பிருப்பதாகச் சர்ச்சை வெடித்து, தமிழகம் கொந்தளித்தது. 

இதற்கிடையில், புகார் அளித்த கல்லூரி மாணவியின் அண்ணனை தாக்கியதாக பார் நாகராஜன், மணிவண்னன் உள்ளிட்ட நான்கு பேர் மீது அடிதடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு உள்ளிட்ட நான்கு பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனாலும், வழக்கின் விசாரணையில் நம்பிக்கை இல்லை என்ற மக்கள் கொந்தளிப்பை அடக்க முடியவில்லை. உடனடியாக வழக்கின் விசாரணை சி.பி.சி.ஐ.டி வசம் ஒப்படைக்கப்பட்டது. சி.பி.சி.ஐ.டி விசாரணையும் சரிவராது என்று எதிர்க்கட்சிகள் முழக்கமிட வேறு வழியில்லாமல் தமிழக அரசு சார்பாக சி.பி.ஐ விசாரணை கோரப்பட்டது. ஆனால், ஏதோ காரணத்தால் அது ஏற்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு

சி.பி.சி.ஐ.டி போலீஸார் தங்களது விசாரணையை முடுக்கினர். இந்தச் சூழலில் அடிதடி வழக்கில் தலைமறைவான மணிவண்ணன் கோவை நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரையும் சி.பி.சி.ஐ.டி போலீஸார் காவலில் எடுத்து விசாரித்தனர். இந்த விசாரணையில், ``திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஸ், வசந்தகுமார் ஆகியோரோடு சேர்ந்து நானும் திருநாவுக்கரசுவின் பண்ணை வீட்டில் பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ பதிவு செய்தேன்'' என்று ஒப்புதல் வாக்கு மூலமாக அளித்துள்ளார்.

இதையடுத்து, பொள்ளாச்சி போலீஸார் பதிவு செய்த வழக்கை விடுத்து, இந்த ஐந்துபேர் மீதும் புதிய எஃப்.ஐ.ஆரை பதிவு செய்துள்ளது 
சி.பி.சி.ஐ.டி போலீஸ். இதற்கு முன் இருந்த வழக்கில் குற்றவாளிக்கு ஐந்து ஆண்டுகள் மட்டுமே தண்டனை வழங்க முடியும் என்ற சூழல் நிலவியது. ஆனால், தற்போது அவர்கள் மீது பாலியல் வன்கொடுமை, தகவல் தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பதியப்பட்டுள்ள வழக்கில், குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆயுள் தண்டனை வரை வழங்க வாய்ப்பு உள்ளதாகச் சொல்கிறார்கள். இந்த வழக்கில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க