வெளியிடப்பட்ட நேரம்: 15:06 (02/06/2013)

கடைசி தொடர்பு:12:17 (03/06/2013)

முன்னாள் அமைச்சர் ஜி.ஆர்.எட்மண்ட் காலமானார்

நெல்லை: எம்.ஜி.ஆர். காலத்து அரசியல்வாதியான ஜி.ஆர்.எட்மண்ட் இன்று மரணம் அடைந்தார்.

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரியைச் சேர்ந்தவர் எட்மண்ட். வழக்கறிஞரான இவர் எம்.ஜி.ஆரின் தீவிர விசுவாசியாக இருந்தார். தி.மு.க.விலிருந்து எம்.ஜி.ஆர். விலகி அ.தி.மு.க.வை தொடங்கியபோது அவருடன் அக்கட்சியில் சேர்ந்து அரசியல் பணியாற்றினார். இவர் 1967 முதல் 72 வரை முதல்முறையாக எம்.எல்.ஏ.வாக இருந்தார்.

பின்னர் 1972-1977 ஆகிய வருடங்களில் எம்.எல்.ஏ.வாக பணியாற்றினார். இதன்பின்னர் 77 முதல் 80 வரை உணவுத்துறை அமைச்சராக பதவி வகித்தார். அத்துடன் எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது 1969 முதல் 1971 வரையில் துணை சபாநாயகராகவும் சிறப்பாக பணியாற்றினார். தமிழக அரசின் டெல்லி பிரதிநிதியாக 1983ல் நியமிக்கப்பட்ட அவர் மூன்று ஆண்டுகள் திறமையாக செயல்பட்டு, மத்திய, மாநில அரசுகளுக்கு பாலமாக செயல்பட்டார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராகவும் மூன்று ஆண்டுகள் பணியாற்றிய அனுபவமும் இவருக்கு இருந்தது. எம்.ஜி.ஆர். காலத்திற்கு பின்னர் அரசியலில் இருந்து ஓய்வு பெற்று சமூக சேவைகளில் ஈடுபட்டு வந்தார். இவரது முயற்சியால் மீனவர்களின் வளத்துக்காக அறக்கட்டளை ஒன்று தொடங்கப்பட்டு, அதன் சார்பில் தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூரில் பாலிடெக்னிக் கல்லூரியும், கல்வியியல் கல்லூரியும் தொடங்கப்பட்டது.

கடந்த சில தினங்களுக்கு இதயம் சம்பந்தமாக உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர் மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். அவருக்கு வயது 82. அவருக்கு மனைவி மற்றும் நான்கு குழந்தைகள் உள்ளனர்.

முன்னாள் அமைச்சர் எட்மண்ட்டின் இறுதி சடங்கு அவரது சொந்த ஊரான ஆறுமுகநேரியில் நாளை நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

-ஆண்டனிராஜ்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்