`பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை!' - நல்லகண்ணு வேதனை | Nallakannu worried about women safety

வெளியிடப்பட்ட நேரம்: 11:55 (29/04/2019)

கடைசி தொடர்பு:11:55 (29/04/2019)

`பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை!' - நல்லகண்ணு வேதனை

``பொள்ளாச்சி சம்பவத்தில் இருந்தே தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை'' என்று  இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

நல்லகண்ணு

நாமக்கல்லில் ஓய்வுபெற்ற அலுவலர் சங்கத்தின் 20-ம் ஆண்டு நிறைவு விழா நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார். அப்போது, ``அரசுப் பணியில் உள்ளவர்கள் மட்டுமின்றி ஓய்வு பெற்றவர்களும் உரிமைக்காக போராட வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சியாளர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தைக் கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தைத் தொடர வேண்டும். இல்லை என்றால் தொடர்ந்து போராட்டம் நடக்கும். 

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் இருந்தே தமிழகத்தில் பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. பெண்களுக்குப் பாதுகாப்பைக் கொடுக்க வேண்டியது அரசின் பொறுப்பு ஆகும். பாலியல் வன்முறைகள் தொடர்ந்து நடக்க அனுமதிக்கக்கூடாது. அதைத் தடுத்து நிறுத்த வேண்டும். புலனாய்வுக் குழு மூலம் குற்றவாளிகளைக் கண்டறிந்து அவர்களுக்கு உடனடியாக தண்டனை வழங்க வேண்டும். மதுரை சம்பவம் தேர்தல் ஆணையத்தின் தவறான கொள்கை மற்றும் அணுகுமுறையை காண்பிக்கிறது. தேர்தல் அதிகாரிகள் ஆளுங்கட்சிக்குத் துணையாக இருப்பதை எடுத்துக்காட்டுகிறது. மே மாதம் 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளது. அதுவரை வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க