பொள்ளாச்சி பாலியல் வழக்கு!- ரகசியமாக விசாரணையைத் தொடங்கியது சி.பி.ஐ | CBI enquiry starts over pollachi case

வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (29/04/2019)

கடைசி தொடர்பு:17:40 (29/04/2019)

பொள்ளாச்சி பாலியல் வழக்கு!- ரகசியமாக விசாரணையைத் தொடங்கியது சி.பி.ஐ

பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணையை சி.பி.ஐ ரகசியமாகத் தொடங்கிவிட்டது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள்

பொள்ளாச்சி பாலியல் வழக்கு நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஸ், வசந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும், மணிவண்ணன் என்பவரும் சரண்டராகி, குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். இதையடுத்து, இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டு பிறகு, சி.பி.ஐ விசாரணைக்கும் பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால், ஒரு மாதத்துக்கு மேலாகியும் இந்த வழக்கை சி.பி.ஐ ஏற்றுக்கொள்ளாமல் இருந்தது. இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் சி.பி.ஐ இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதனிடையே, நேற்று முன்தினம் சி.பி.ஐ விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.

இந்நிலையில், பொள்ளாச்சியில் பாலியல் வழக்கு சம்பந்தமான விசாரணையை நேற்று மதியம் முதல் ரகசியமாக நடத்தி வருகின்றனர். இதற்காக, சி.பி.ஐ அதிகாரிகள் கோவையிலிருந்து நேற்று மதியம் பொள்ளாச்சி வந்து, பொது மக்களோடு மக்களாக தங்களது விசாரணையை ரகசியமாகத் தொடங்கியுள்ளனர். இதுதொடர்பாக, கைப்பற்றிய ஆவணங்களை, சி.பி.சி.ஐ.டி தரப்பில் சி.பி.ஐ-க்கு வழங்கப்பட்டுவிட்டன. குறிப்பாக, இந்தச் சம்பவம் கடந்த ஏழு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது என்று புகார் உள்ளதால், ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவங்கள் என்னென்ன, இந்தப் பிரச்னை எங்கிருந்து ஆரம்பித்தது? என்பது குறித்து கைது செய்யப்பட்டவர்களின் செல்போன் எண்களின் தொடர்புகள் முகநூல் பரிமாற்றங்கள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். இந்த நபர்கள் மீது ஆனைமலை, கோட்டூர் காவல் நிலையங்களில் புகார்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே, அந்தப் புகாரின் அடிப்படையில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சம்பந்தப்பட்டு உள்ளார்களா, அரசியல் புள்ளிகளின் தலையீடு தொடர்பு போன்றவை குறித்து விசாரணையை தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாலியல் வன்கொடுமை நடந்த வீடு

முக்கியமாக, பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளிலும் அதிகாரிகள் விசாரணையை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. அடுத்தகட்டமாக, சிறப்பு அனுமதி பெற்று சிறையில் உள்ள குற்றவாளிகளிடமும் சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். பொதுவாக, சி.பி.ஐ அதிகாரிகள் தங்களது விசாரணையை மிகவும் ரகசியமாக வைத்திருப்பார்கள். இதில் போலீஸாரின் செயல்களும் சர்ச்சை ஏற்படுத்தியிருப்பதால், அவர்களிடமும் விசாரணை நடத்த சி.பி.ஐ திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், போலீஸ் தரப்பில் கலக்கத்தில் உள்ளனர்.