“மிரட்டல்களுக்கு அஞ்சும் ஆள் நான் இல்லை" - ஆடியோ விவகாரம் குறித்து பொள்ளாச்சி பார் நாகராஜ் | Pollachi Bar Nagaraj petition to Coimbatore SP

வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (29/04/2019)

கடைசி தொடர்பு:21:30 (29/04/2019)

“மிரட்டல்களுக்கு அஞ்சும் ஆள் நான் இல்லை" - ஆடியோ விவகாரம் குறித்து பொள்ளாச்சி பார் நாகராஜ்

'நான் மிரட்டல்களுக்கு அஞ்சும் ஆள் இல்லை' என்று பொள்ளாச்சி பார் நாகராஜ் கூறியுள்ளார்.

பார் நாகராஜ்

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பான அடிதடி வழக்கில் சிக்கியவர், பார் நாகராஜ். அ.தி.மு.க-வில் இருந்த பார் நாகராஜ், இந்த வழக்கு தீவிரமடைந்த பிறகு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், பார் நாகராஜ் பெண் ஒருவரை மிரட்டுவது போன்ற ஆடியோ, கடந்த சில நாள்களுக்கு முன்பு வெளியானது.

அதன்படி, கோவை மாவட்டம் ஆனைமலையைச் சேர்ந்த விஜய் என்பவர், கோகிலா மற்றும் அவரது கணவர் சம்பத் மீது கொடுத்த மோசடிப் புகாரை திரும்பப்பெறக் கூறி, விஜய்யின் மனைவி ஜூலியன்ராயர் என்பவரை செல்போனில் பார் நாகராஜ் மிரட்டல் விடுப்பது போன்ற ஆடியோ வெளியாகி, சமூக வலைதளங்களில் வைரலானது.

பார் நாகராஜ்

இதையடுத்து, இந்த ஆடியோ விவகாரம் தொடர்பாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்த பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய பார் நாகராஜ்,  “அந்த ஆடியோவில் பேசுவது நான் இல்லை. ஆடியோவில் குறிப்பிடப்படும் விஜய் மற்றும் ஜூலியன்ராயர் மீது நான் பொள்ளாச்சி நகரக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன், என்னுடைய நண்பரின் உறவினரான கோகிலா இதுதொடர்பாக என்னிடம் அணுகியபோது, காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சொன்னதே நான்தான்.

மேலும், இதுதொடர்பாக வார இதழ் ஒன்றின் செய்தியாளர் என்னிடம் பேசினார். அதற்கு அடுத்த நாள்தான் ஆடியோ வெளியாகி உள்ளது. எனவே, அந்தச் செய்தியாளர் மற்றும் அந்தப் பெண்ணை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது, வழக்கு சி.பி.ஐ-யிடம் சென்ற நிலையில், வேண்டுமென்று என்னை சிக்கவைப்பதற்காக இப்படி ஓர் நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர். இது தொடர்பாக மிரட்டல்களும்வருகின்றன. ஆனால், நான் அதற்கெல்லாம் அஞ்சும் ஆள் இல்லை” என்றார்.