படம் ஓடிக்கொண்டிருக்கும்போதே தீப்பிடித்து எரிந்த புரஜக்டர்! - கன்னியாகுமரி திரையரங்கில் பரபரப்பு | Fire accident in kanyakumari Cinema Theatre

வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (29/04/2019)

கடைசி தொடர்பு:23:00 (29/04/2019)

படம் ஓடிக்கொண்டிருக்கும்போதே தீப்பிடித்து எரிந்த புரஜக்டர்! - கன்னியாகுமரி திரையரங்கில் பரபரப்பு

கேரள எல்லையில் திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தபோதே திரையரங்கம் தீ பிடித்து எரிந்தது. இரண்டு மாநில தீயணைப்பு வீரர்கள் இணைந்து தீயை அணைத்தனர்.

தீவிபத்து


கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழக - கேரள எல்லைப் பகுதியான களியக்காவிளைப் பகுதியில் தமின்ஸ் மேக்ஸ் என்ற திரையரங்கு உள்ளது. இந்தத் திரையரங்கில் `எமன்டன் பிறேமகதா' என்ற மலையாள சினிமா முதல் காட்சியாக ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது. சினிமா தொடங்கிய ஒரு மணி நேரத்தில் திடீரென திரையரங்கக் கட்டுபாட்டு அறையிலிருந்து புகை கிளம்பியது. இதைப் பார்த்த ரசிகர்கள் திரையரங்கை விட்டு ஓட்டம் பிடித்தனர். உடனடியாக கட்டுபாட்டு அறைக்குச் சென்ற திரையரங்கு ஊழியர்கள் தீ அணைப்பான்கள் மூலம் தீயை அணைக்கும் முயற்சியில் இறங்கினர். ஆனால் தீ மளமளவெனப் பரவியதால் கேரள மாநிலம் பாறசாலை தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

தீவிபத்து

 

இரண்டு குழுக்களாக வந்த தீயணைப்புத் துறையினர் தீ அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் தீயைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதையடுத்து குமரி மாவட்டத்தின் குழித்துறை தீயணைப்புத் துறையினர் அங்கு சென்று தீயை அணைக்கும் முயற்சியில் இறங்கினர். இரண்டு மாநில தீயணைப்பு வீரர்களும் இரண்டு மணி நேரத்திற்கு மேல் போராடி தீயை முழுவதும் அணைத்தனர். இந்தத் தீவிபத்து காரணமாக திரையரங்கின் புரொஜக்ட்டர், ஏசி உட்பட அறுபது லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாகின. இதை தொடர்ந்து இன்றைய அனைத்துக் காட்சிகளும் ரத்து செய்யப்பட்டன. இதை தொடர்ந்து பாறசாலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற் கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. கேரள எல்லையில் அமைந்துள்ள தியேட்டரில் ஏற்பட்ட தீயை இரண்டு மாநில தீயணைப்புத்துறையினர் அணைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.