நாமக்கல் அருகே குழந்தைகள் விற்கப்பட்ட வழக்கு - சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றி டி.ஜி.பி உத்தரவு! | baby theft Case changed to cbcid

வெளியிடப்பட்ட நேரம்: 10:15 (30/04/2019)

கடைசி தொடர்பு:10:21 (30/04/2019)

நாமக்கல் அருகே குழந்தைகள் விற்கப்பட்ட வழக்கு - சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றி டி.ஜி.பி உத்தரவு!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை செய்யப்படுவது தொடர்பாக சமீபத்தில் வாட்ஸ்அப் ஆடியோ ஒன்று வெளியானது.இவ்வழக்கில் இதுவரை 9-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.

குழந்தைகள்

இவ்வழக்கில் கைதான கொல்லிமலை ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன், ஓய்வுபெற்ற நர்ஸ் அமுதவள்ளியிடம் 6 குழந்தைகளை விற்பனை செய்ததாக போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கொல்லிமலையில் உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப மற்றும் துணை ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாவட்ட தாய்சேய் நல அலுவலர் தேவி தலைமையில், பயிற்சியில் உள்ள 15 நர்ஸ்கள் மருத்துவமனையில் உள்ள பிறப்பு பதிவேடுகளை சரிபார்த்தல், தத்துக் கொடுத்த குழந்தைகளின் விவரங்களை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

குழந்தைகள்

கொல்லிமலையில் முகாமிட்டுள்ள இந்தக் குழுவினர் இன்னும் ஒரு வார காலத்துக்குள் விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய இருப்பதாகவும், அதன் பிறகே கொல்லிமலை பகுதியில் இருந்து எத்தனை குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பது தெரியவரும் எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே தடுப்பூசி போடும் பணியின்போது 20 குழந்தைகள் அவர்களின் பெற்றோரிடம் இல்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு தமிழகம் முழுதும் பெரிய அளவில் வலைப்பின்னல் போன்று இருக்கலாம் என்பதால் வழக்கின் முக்கியத்துவம் கருதி வழக்கை சிபிசிஐடி போலீஸுக்கு மாற்றி டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க