`நான் சொன்னேன்; அவள் கேட்கல' - கொலை வழக்கில் சிக்கிய கட்டட மேஸ்திரியின் பின்னணி   | Maistry who killed his wife in chennai

வெளியிடப்பட்ட நேரம்: 13:11 (01/05/2019)

கடைசி தொடர்பு:13:11 (01/05/2019)

`நான் சொன்னேன்; அவள் கேட்கல' - கொலை வழக்கில் சிக்கிய கட்டட மேஸ்திரியின் பின்னணி  

கட்டட மேஸ்திரி  மலரை கொலை செய்த வீடு

 `கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாகக் கணவன், மனைவியாக நாங்கள் வாழ்ந்துவருகிறோம். தற்போது மலரின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்தது. அதை நான் தட்டிக்கேட்டபோது அவள் கேட்கல. இதனால் அவளைக் கொலை செய்துவிட்டேன்' என்று கட்டட மேஸ்திரி முருகன் போலீஸிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னைத் துரைப்பாக்கம், கண்ணகி நகரை அடுத்த எழில் நகரைச் சேர்ந்தவர் பழனி. இவரின் மனைவி மலர். இவர்களின் மகள் சசிகலா. சில ஆண்டுகளுக்கு முன் மலரைப் பிரிந்து பழனி சென்றுவிட்டார். இதனால் குழந்தையுடன் மலர் தனியாகக் குடியிருந்தார். குடும்ப பாரத்தை சுமந்த மலர், சித்தாள் வேலைக்குச் சென்றார். அதன்மூலம் கிடைத்த வருமானத்தில் சசிகலாவும் மலரும் வாழ்க்கை நடத்தினர். அப்போதுதான் தேனாம்பேட்டையைச் சேர்ந்த கட்டட மேஸ்திரி முருகனுடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 
மலரின் வீட்டுக்கு முருகன் அடிக்கடி வந்துள்ளார். 

இந்தநிலையில் சசிகலாவை திருவண்ணாமலையில் திருமணம் செய்து கொடுத்தார் மலர். அதன்பிறகு எழில்நகர் வீட்டில் தனியாக அவர் குடியிருந்தார். இந்தச் சூழ்நிலையில் மலரின் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாகக் கண்ணகி நகர் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் வீரக்குமார் தலைமையிலான போலீஸார், சம்பவ இடத்துக்குச் சென்றனர். வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றபோது அழுகிய நிலையில் சடலமாக மலர் கிடந்தார். வீடு வெளிப்பக்கமாகப் பூட்டியிருந்ததால் அவரை யாராவது கொலை செய்திருக்க வேண்டும் என போலீஸார் சந்தேகித்தனர். இதையடுத்து மலரின் வீட்டுக்கு யார், யார் வருவார்கள் என்று போலீஸார் விசாரித்தனர். அப்போது தேனாம்பேட்டையைச் சேர்ந்த மேஸ்திரி முருகன் வருவது தெரியவந்தது. முருகனிடம் போலீஸார் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 

 கட்டட மேஸ்திரி மலரை கொலை செய்த வீடு

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``மலருக்கும் முருகனுக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாகப் பழக்கம் இருந்துவந்துள்ளது. கடந்த 26-ம் தேதி மலருக்கும் முருகனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த முருகன், மலரின் தலையில் அம்மிக்கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்துள்ளார். பிறகு வீட்டைப் பூட்டிவிட்டு அவர் தப்பிச் சென்றுவிட்டார். ரத்தவெள்ளத்தில் வீட்டுக்குள்ளேயே இறந்து கிடந்துள்ளார் மலர். அவரின் சடலம் அழுகி துர்நாற்றம் வீசியபிறகுதான் இந்தச் சம்பவம் வெளியில் தெரியவந்துள்ளது. மலரைக் கொலை செய்த குற்றத்துக்காக முருகனைக் கைது செய்துள்ளோம். கொலைக்குப் பயன்படுத்திய அம்மிக்கல்லையும் பறிமுதல் செய்துள்ளோம்"என்றனர். 

முருகனிடம் போலீஸ் நடத்திய விசாரணையில் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், `நானும் மலரும் கணவன் மனைவி போல ஒரே வீட்டில் குடியிருந்தோம். ஆனால், சில மாதங்களாக மலரின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்தது. அவருக்கு வேறு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதுகுறித்து மலரிடம் நான் கேட்டபோது அவர் என்னை எதிர்த்துப் பேசினார். மேலும் அந்தப் பழக்கத்தை கைவிடும்படி மலரிடம் கூறினேன். ஆனால் அவர் கேட்கவில்லை. சம்பவத்தன்று எனக்கும் மலருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால், அம்மிக்கல்லை தூக்கி அவரின் தலையில் போட்டு கொலை செய்தேன்' என்று கூறியுள்ளார். 

 கட்டட மேஸ்திரி

பூட்டிய வீட்டுக்குள் மலர் கொலை செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும் முதலில் போலீஸாருக்கு எந்தவித துப்பும் கிடைக்கவில்லை. அப்போதுதான் மலரின் செல்போனை போலீஸார் ஆய்வு செய்தபோது முருகனுடன் அவர் அடிக்கடி பேசிய தகவல் கிடைத்தது. உடனடியாக போலீஸார், முருகனை செல்போனில் தொடர்பு கொண்டனர். அப்போது அவரின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால், மலர் கொலையில் முருகனின் மீதான சந்தேகம் வலுத்தது. தொடர்ந்து தேனாம்பேட்டைக்குச் சென்று முருகன் குறித்து போலீஸார் விசாரித்தனர். அப்போதுதான் அவர் தலைமறைவாகப் பதுங்கியிருக்கும் இடம் குறித்த தகவல் போலீஸாருக்குக் கிடைத்தது. உடனடியாக அங்குச் சென்ற போலீஸார் அவரைப்பிடித்து விசாரித்தபோது உண்மையை அவர் ஒப்புக் கொண்டுள்ளார். 

 மலர், தங்கியிருந்த வீடு அடுக்குமாடிகுடியிருப்பு. இதனால் அவரைக் கொலை செய்யும்போது வெளியில் சத்தம் கேட்காமலிருக்க டிவியை சத்தமாக வைத்துள்ளார். இதனால்தான் அவரின் அலறல் சத்தம் பக்கத்துக்கு வீட்டுக்குக்கூட கேட்கவில்லை என்று போலீஸார் தெரிவித்தனர்.