மாயமான புதுக்கோட்டை வங்கி ஊழியர்; எரிக்கப்பட்ட நிலையில் கார் கண்டெடுப்பு! - தனிப்படை விசாரணை | Police investigation going on over bank staff missing case

வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (01/05/2019)

கடைசி தொடர்பு:07:54 (02/05/2019)

மாயமான புதுக்கோட்டை வங்கி ஊழியர்; எரிக்கப்பட்ட நிலையில் கார் கண்டெடுப்பு! - தனிப்படை விசாரணை

புதுக்கோட்டையில் மாயமான வங்கி ஊழியர் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில், வங்கியில் திடீரென பணம், நகை குறித்த ஆய்வு நடைபெற்றதால், போலீஸார் 3  தனிப்படை அமைத்து விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

வங்கி ஊழியர்

புதுக்கோட்டை அருகே திருக்கட்டளையைச் சேர்ந்தவர் மாரிமுத்து (38). இவர் புதுக்கோட்டையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த ஏப்ரல் 29-ம் தேதி அலுவலகம் சென்றவர் வீடு திரும்பாமல் மாயமானதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, மாரிமுத்துவின் மனைவி ராணி தனது கணவரைக் காணவில்லை என்று கூறி புதுக்கோட்டை கணேஷ் நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வழக்கு பதிந்த கணேஷ் நகர் போலீஸார் மாரிமுத்துவை தேடி வருகின்றனர். இந்த நிலையில்தான், புதுக்கோட்டை அருகே வளநாடு பகுதியில் உள்ள தைலமரக்காட்டில் கார் ஒன்று முழுவதும் எரிந்த நிலையில் கிடந்தது. காருக்குள்  வளையல்கள் உள்ளிட்ட சில ஆபரணங்கள் எரிந்த நிலையில் கிடந்ததாகக் கூறப்படுகிறது.

கார்

இதுகுறித்து, அறிந்த வல்லத்திராக்கோட்டை போலீஸார் காரைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில், வங்கி ஊழியர் மாரிமுத்துவின் கார் என அடையாளம் காணப்பட்டது. மாரிமுத்து காணாமல் போன அன்றுதான் காரும் எரிக்கப்பட்டிருப்பதால், இந்த வழக்கு குறித்து போலீஸார் 3 தனிப்படைகள் அமைத்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, புதுக்கோட்டை பஞ்சாப் நேஷனல் வங்கிக்கிளையில் விடுமுறை நாளான இன்று ஆய்வு நடந்தது. வாடிக்கையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. திருச்சி மண்டல வங்கி அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். வங்கியில் ஏதேனும் நகை அல்லது பணம் ஏதேனும் களவு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு என்று கூறப்படுகிறது.

வங்கி

வங்கியில் விடுமுறை நாளான இன்று நடைபெற்ற ஆய்வு பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. வங்கியில் ஏதேனும் பிரச்னை வந்ததால்,  நகை,பணத்துடன் மாயமானாரா? அவர் கடத்தப்பட்டு இருக்கலாமா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணை நடத்துகின்றனர்.

இதுகுறித்து போலீஸார் ஒருவர் கூறும்போது, ``வங்கி ஊழியரின் மனைவி கொடுத்த புகாரின் பேரில் காணாமல் போனது குறித்த விசாரணை நடைபெறுகிறது. வங்கியில் உதவியாளராக இருந்தாலும், நகை மதிப்பீடு உள்ளிட்ட பல்வேறு பணிகளை இவர் செய்துள்ளார். ஆனால், வங்கியில் இருந்து 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை, பணம் காணாமல் போயிருக்கக்கூடும் என்று நினைக்கிறோம். வங்கி நிர்வாகத்திடம் இருந்து புகார் ஏதும் வரவில்லை" என்றார்.