ரூ.22.5 கோடியில் குமரியில் திருப்பதி கோயில் கட்டப்படுகிறது: நாளை பூமி பூஜை! | kanyakumari, Thirupathi devasthanam Temple, people, 22 crore, Tamilnadu, india, thirupathi venkatachalapathy

வெளியிடப்பட்ட நேரம்: 13:28 (03/06/2013)

கடைசி தொடர்பு:14:14 (04/06/2013)

ரூ.22.5 கோடியில் குமரியில் திருப்பதி கோயில் கட்டப்படுகிறது: நாளை பூமி பூஜை!

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் 120 ஏக்கரில் அமைந்திருக்கும் விவேகானந்த கேந்திர வளாகத்தில் 5.5 ஏக்கர் பரப்பில் பிரமாண்டமாக அமைய உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நாளை நடக்கிறது. குமரியிலும் கோயில் அமைய இருப்பதால் உற்சாகத்தில் இருக்கிறார்கள் தென் மாவட்ட வெங்கடாஜலபதி பக்த கோடிகள்.

திருப்பதி தேவஸ்தான கோயிலுக்கு இந்தியா முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் தினமும் சென்று வருகிறார்கள். இதனால் திருமலை, திருப்பதி தேவஸ்தானம் எப்பொழுதும் ஜன நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் சூழல் நிலவுகிறது. சாதாரண நேரங்களிலேயே கூட்டம் குவிந்து வரும் திருப்பதி திருக்கல்யாணம் போன்ற முக்கிய நிகழ்வுகளில் திக்கு முக்காடி போகிறது. அந்த நேரங்களில் திருப்பதி நகரமே விழி பிதுங்கும் அளவுக்கு கூட்டம் குவிவதால் இந்தியாவின் முக்கியமான ஆன்மிக நகரங்களில் திருமலை தேவஸ்தானம் சார்பில் சுவாமி அம்பாள் திருக்கல்யாண நிகழ்வை நடத்தி வருகிறது.

அந்த வகையில் கன்னியாகுமரி, விவேகானந்த கேந்திரத்தில் வைத்து கடந்த 2010ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி திருக்கல்யாணத்தை நிகழ்த்தியது திருப்பதி தேவஸ்தானம். அதில் தென் தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து குவிந்துவிட களை கட்டியது கேந்திரம். லட்சக்கணக்கானோர் திரண்டு வந்ததால் இங்கேயும் ஒரு திருமலை திருப்பதி தேவஸ்தான கோவிலை கட்ட முடிவு செய்தார்கள். இதற்காக விவேகானந்த கேந்திரத்திடம் ஒப்புதல் பெறப்பட்டு கேந்திரத்தின் சார்பில் 5.5 ஏக்கர் நிலமும் ஒதுக்கப்பட்டது.

இதே போல் திருமலை திருப்பதி தேவஸ்தானமும் கோவில் கட்ட ரூ.22.5 கோடியை ஒதுக்கி தீர்மானம் நிறைவேற்றியது. இப்போது தேர்வு செய்த இடத்தில் ஆலயம் கட்டுவதற்கான பூமி பூஜை நாளை நடக்கிறது. இதனையொட்டி அதன் பணிகள் குறித்து ஆய்வு செய்ய திருப்பணி குழுவின் தலைவர் ஆனந்தகுமார் ரெட்டி தலைமையிலான குழுவினர் நேற்று கேந்திரம் வந்திருந்து ஆய்வு செய்தனர்.

இரண்டு ஆண்டுகளில் கோவிலை கட்டி முடிக்கும் திட்டத்தில் இருக்கிறது திருமலை திருப்பதி தேவசம்போர்டு நிர்வாகம். கேந்திரத்தின் உள்ளே கடற்கரையை ஒட்டியுள்ள பகுதியில் தான் ஆலயம் வர இருக்கிறது. ஆலயத்தின் அருகிலேயே வேதபாட சாலை, கோமடம் உள்ளிட்டவையும் அமைய இருக்கிறது. திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் நடப்பது போலவே அதே நேரத்தில் இங்கும் பூஜை, விழாக்கள் நடக்கும் என்று சொல்கிறார்கள் திருமலை திருப்பதி தேவசம்போர்டு அதிகாரிகள்.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் டெல்லி, பெங்களூரு, ரிஷிகேஸ் உள்ளிட்ட ஆறு இடங்களில் ஏற்கனவே கோயில் கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில் இப்போது 7 வதாக கன்னியாகுமரியிலும் கோயில் அமைய இருப்பதால் உற்சாகத்தில் இருக்கிறார்கள் தென் மாவட்ட வெங்கடாஜலபதி பக்த கோடிகள்.

என்.சுவாமிநாதன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்