வருமானவரித்துறை ரெய்டு - லாட்டரி மார்ட்டின் ஊழியர் உடல் சடலமாக மீட்பு! | Lottery Martin's employee died in Coimbatore

வெளியிடப்பட்ட நேரம்: 19:15 (03/05/2019)

கடைசி தொடர்பு:20:26 (09/05/2019)

வருமானவரித்துறை ரெய்டு - லாட்டரி மார்ட்டின் ஊழியர் உடல் சடலமாக மீட்பு!

வருமான வரித்துறை விசாரணையிலிருந்து விடுவிக்கப்பட்ட, கோவைத் தொழிலதிபர் லாட்டரி மார்ட்டினின் ஊழியர் உடல் சடலமாக மீட்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மார்ட்டின்

கோவையைச் சேர்ந்த லாட்டரி மார்ட்டின் என்ற தொழிலதிபர், மேற்கு வங்காளம், அஸ்ஸாம் போன்ற பகுதிகளில் லாட்டரி தொழிலில் ஈடுபட்டு வருகிறார். தி.மு.க தலைவர் கருணாநிதியின் கைவண்ணத்தில் உருவாகிய `இளைஞன்' திரைப்படத்தை தயாரித்தவரும் இந்த மார்ட்டின்தான். நாடு முழுவதும் லாட்டரி மார்ட்டின் சம்பந்தப்பட்ட 70 இடங்களில் கடந்த செவ்வாய்கிழமை தொடங்கி 4வது நாளாக வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக, மார்ட்டினின் ஊழியர்கள் வீட்டிலும் வருமான வரித்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். தேர்தல் நேரம் என்பதாலும், மார்ட்டின் தி.மு.க ஆதரவாளர் என்பதாலும் இந்தச் சோதனையில் உள்நோக்கம் இருப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், மார்ட்டின் நிறுவனத்தில் காசாளராக இருக்கும் பழனி என்பவரின் சடலம் வெள்ளியங்காடு பகுதியில் உள்ள குட்டையிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த பழனி

காரமடையைச் சேர்ந்த பழனியை வருமானவரித்துறையினர் கடந்த இரண்டு நாள்களாக விசாரணை நடத்தியதாகவும், அப்போதே பழனி தனது கையை அறுத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, துடியலூரில் உள்ள வி.ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பழனி, இன்று காலையில்தான் விடுவிக்கப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து, பழனி வெள்ளியங்காடு அருகே உள்ள மாநகராட்சி குடிநீர் சுத்திகரிக்கும் நிலையத்துக்கு எதிரே உள்ள குட்டையில் விழுந்து இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பழனியின் உடலை மீட்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

"மார்ட்டின் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியின் காசாளர் பழனியிடம் நேற்றே விசாரணை முடிந்து விட்டது. நேற்று விசாரணைக்கு வந்தபோதே கையில் காயத்துடன் அவர் வந்தார்.இன்று அவரை நாங்கள் விசாரணைக்கு அழைக்கவில்லை.பழனியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களும், கொல்கத்தாவில் மார்ட்டினிடம்  கைப்பற்றப்பட்ட ஆவணங்களும் ஒத்துப் போகின்றன. தேவைப்பட்டால், கோவை போலீஸாருக்கு இது தொடர்பான தகவல்கள் வழங்கப்படும்" என்று வருமானவரித்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.