`கோயிலில் வைத்து பூஜை செய்தால் சொத்து பெருகும்!' - பெண் குரலில் பேசி நகை, பணம் பறித்த 2 பேர் கைது | Sattur police arrest 2 over robbery

வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (03/05/2019)

கடைசி தொடர்பு:21:30 (03/05/2019)

`கோயிலில் வைத்து பூஜை செய்தால் சொத்து பெருகும்!' - பெண் குரலில் பேசி நகை, பணம் பறித்த 2 பேர் கைது

சமூக வலைதளங்கள் மற்றும் மொபைல் மூலம் பெண் குரலில் பேசி, பெண்களிடம் நகை மற்றும் பணம் பறித்த  இரண்டு இளைஞர்களைக் கைதுசெய்த சாத்தூர் காவல் துறையினர், அவர்களிடமிருந்து 61 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சம் பணத்தைப் பறிமுதல்செய்தனர்.

மீட்கப்பட்ட நகைகள்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மற்றும் சிவகாசி பகுதியில், பெண்களிடம் சிலர் நகை மற்றும் பணத்தை ஏமாற்றி பறித்துச் சென்றதாக சிவகாசியைச் சேர்ந்த ராதிகா மற்றும் செண்பக பவானி ஆகியோர், கடந்த பிப்ரவரி மாதம் சாத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து, சாத்தூர் நகர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கண்ணன் தலைமையிலான காவல் துறையினர், தனிப்படை அமைத்து அந்தப் பெண்களிடம் பேசிய மொபைல் எண் மூலம் அந்த நபர்களைத் தேடி வந்தனர். இதில், சாத்தூா் பெரியார் நகரைச் சேர்ந்த ராஜ்குமார் (32), அமீர்பாளையத்தைச் சேர்ந்த நவீன்குமார் (20) ஆகியோர் இந்தச் சம்பவத்தில்  ஈடுபட்டது தெரியவந்தது.

கைது செய்யப்பட்டுள்ள ராஜ்குமார் மற்றும் நவீன் குமார்

இவர்கள் இருவரும் சாத்தூர் மற்றும் சிவகாசி பகுதிகளைச் சேர்ந்த வசதியான பெண்களிடம், சமூக வலைதளங்கள் மற்றும் மொபைல் போனில் பெண் குரலிலும், நாடக நடிகைகளின் குரலிலும் பேசியுள்ளனர். பின்னர், 'உங்களுடைய நகைகளை  கோயிலில் வைத்து பூஜை செய்தால், உங்களின் சொத்து பெருகி நல்லது நடக்கும்' என்று கூறியுள்ளனர். இதனை நம்பிய பெண்கள், வீட்டில் இருந்த நகைகளைக் கொடுத்துள்ளனர். இதேபோல, பல பெண்களிடம் பேசி பணம் பறித்தது தெரியவந்தது.

இதையடுத்து ராஜ்குமார், நவீன்குமார் ஆகிய இருவரையும் சாத்தூர் நகர் காவல் துறையினர் கைதுசெய்தனா். மேலும், அவர்களிடமிருந்து 61 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.3 லட்சம் பணத்தை காவல் துறையினர் பறிமுதல்செய்தனர். யார் யாரிடமெல்லாம் இதுபோல மோசடி நடந்துள்ளது என்பதுகுறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.