`மிரட்டுறாங்க... சாகப் போறேன்... குடும்பத்தைப் பார்த்துக்கோ!'- மனைவியைப் பதறவைத்த கணவரின் போன்கால் | Lorry owner sucide at namakkal

வெளியிடப்பட்ட நேரம்: 11:25 (04/05/2019)

கடைசி தொடர்பு:11:25 (04/05/2019)

`மிரட்டுறாங்க... சாகப் போறேன்... குடும்பத்தைப் பார்த்துக்கோ!'- மனைவியைப் பதறவைத்த கணவரின் போன்கால்

தவணையை செலுத்துமாறு நிதி நிறுவன அதிகாரிகள் மிரட்டியதால், லாரி உரிமையாளர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் நாமக்கல்லில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 தற்கொலைக்கு முன் கணவர்  ரமேஷ்

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த ராஜாபாளையத்தில் உள்ள சைக்கிள்காரர் தோட்டத்தைச் சேர்ந்த விவசாயி ரமேஷ் (40). இவருடைய மனைவி தமிழ்ச்செல்வி. இவர்களுக்கு 14 வயதில் மகன் உள்ளார். கடந்த ஏழு மாதங்களுக்கு முன், நாமக்கல்லில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில், 12 லட்சம் ரூபாய் கடன் வாங்கி லாரி வாங்கியுள்ளார். இதற்காக மாதந்தோறும் கடன் தவணையை செலுத்தி வந்தார். கடந்த சில மாதங்களாக அவர் தவணை செலுத்தவில்லை என்று தெரிகிறது.

டிரைவராக அவரே செல்வார். கடந்த மாதம் லாரி பழுதானதால், குறிப்பிட்ட தேதியில் தவணையை செலுத்த முடியவில்லை. இதையடுத்து,  நிதி நிறுவன அதிகாரிகள் ரமேஷ் வீட்டுக்கு சம்பவத்தன்று சென்றதோடு, அங்கிருந்த ரமேஷின் பெற்றோரிடம், `உங்கள் மகன் லாரி வாங்கியதற்கான கடன் தவணையை சரியாக கட்டவில்லை. சரியாக கட்டாவிட்டால் லாரியைப் பறிமுதல் செய்து விடுவோம்' என்று மிரட்டிச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 1-ம் தேதி திருச்சி மாவட்டம் துறையூர் உப்பிலியபுரம் அருகே உள்ள வி.ஐ.பி. சிட்டி பகுதிக்கு வந்த ரமேஷ், லாரியை சாலையோரம் நிறுத்திவிட்டு, அவரின் மனைவி தமிழ்ச்செல்விக்கு போன் செய்துள்ளார்.

அப்போது அவர், லாரிக்கான தவணை பணத்தைக் கட்ட முடியாததாலும், நிதி நிறுவன அதிகாரிகள் மிரட்டிச் சென்றதாலும் மனமுடைந்து, `தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன். குடும்பத்தைப் பார்த்துக்கொள்' என்று கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்து விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த தமிழ்ச்செல்வி, அவரது சொந்த ஊரான துறையூர் வேங்கடத்தானூரில் உள்ள அவரின் உறவினர்களுக்குத் தகவல் தெரிவிக்கவே, உறவினர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு ரமேஷ் வி‌ஷம் குடித்த நிலையில், லாரி ஸ்டீரிங்கில் படுத்தவாறு கிடந்தார்.

உடனே மீட்டு துறையூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்றிரவு ரமேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து உப்பிலியபுரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரமேஷ் தற்கொலை செய்வதற்கு முன்பு, கடிதம் ஒன்றையும் எழுதி சட்டைப்பையில் வைத்திருந்தார்.

 ரமேஷ் எழுதிய கடிதம்

அதில் நிதி நிறுவன அதிகாரிகள் மிரட்டியதால் தற்கொலை செய்ததாக கூறியுள்ளார். அந்தக் கடிதத்தை போலீஸார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்வதற்கு முன்பு தன் இறப்புக்கு நிதி நிறுவன அதிகாரிகளே காரணம் என்று கூறி வீடியோ பதிவு செய்துள்ளார். இச்சம்பவம் நாமக்கல்லில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இதுபற்றி நெருங்கிய உறவினர்களிடம் பேசியபோது, ``ரமேஷ் ரொம்ப நல்லவர். யார் மனசையும் புண்படுத்தாம பேசக்கூடியவர். அந்த ஃபைனான்ஸ் ஊழியர்கள் வந்து தவணையை செலுத்தக்கூட முடியாதா? இன்னும் சொல்லக்கூட முடியாத வார்த்தைகள்ல தன்னோட பெற்றோர்களை, குடும்பத்தை திட்டியதை தாங்க முடியாமல்தான் இப்படி பண்ணிகிட்டாரு. தொழில்ல முன்னேறிய குடும்பத்தை நல்லா பாத்துக்கணும்னு நினைச்சாரு. அவருக்கா இப்படியொரு நிலைமை. இதுக்கு காரணமானவர்களை சும்மா விடக்கூடாது' என்று உணர்ச்சிவசத்தை கட்டுப்படுத்த முடியாமல் கண்கலங்குகின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க