`என் செல்லத்தின் உயிரைப் பறிக்கவா மரப்பெட்டியைக் கொண்டு வந்தேன்!'- 8 வயது சிறுமியின் அம்மா கதறல்  | kid died because of wooden box in chennai

வெளியிடப்பட்ட நேரம்: 12:53 (04/05/2019)

கடைசி தொடர்பு:13:49 (04/05/2019)

`என் செல்லத்தின் உயிரைப் பறிக்கவா மரப்பெட்டியைக் கொண்டு வந்தேன்!'- 8 வயது சிறுமியின் அம்மா கதறல் 

`நீயும் நானும் இந்த மரப்பெட்டிக்குள் அமர்ந்து விளையாடுவோமா' என்று மகிழ்ச்சியோடு விளையாட்டைத் தொடங்கினர் அந்தக் குழந்தைகள். ஆனால், விளையாட்டு விபரீதமானது. அக்காளை இழந்த தங்கை, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருகிறார். 

மரப்பெட்டி

சென்னை திருவான்மியூர், திருவள்ளூர் நகரைச் சேர்ந்தவர் திருப்பதி. தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்துவருகிறார். இவரின் மனைவி புவனேஸ்வரி. இவர் வீட்டு வேலை செய்துவருகிறார். இந்தத் தம்பதிக்கு தனுஸ்ரீ (8), சாருலதா (5) என இரண்டு குழந்தைகள். தனுஸ்ரீ அந்தப்பகுதியில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்துவந்தார். 

வீட்டில் அப்பாவும் அம்மாவும் வேலைக்குச் செல்வதால் தனியாகத்தான் இரண்டு குழந்தைகளும் இருப்பது வழக்கம். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் வீட்டிலேயே தனுஸ்ரீயும் சாருலதாவும் இருந்தனர். வழக்கம் போல திருப்பதியும், புவனேஸ்வரியும் நேற்று காலை 8 மணியளவில் வேலைக்குச் சென்றுவிட்டனர். வீட்டில் தனியாக இருந்த தனுஸ்ரீயும் சாருலதாவும் விளையாடியுள்ளனர். இதற்காக வீட்டிலிருந்து மரப்பெட்டிக்குள் இருவரும் அமர்ந்தனர். 

இந்த நிலையில், இரண்டு குழந்தைகளும் மரப்பெட்டிக்குள் அமர்ந்திருந்தபோது பெட்டி மூடிக்கொண்டது. இதனால் குழந்தைகளால் வெளியில் வரமுடியவில்லை. அவர்களின் அலறல் சத்தமும் யாருக்கும் கேட்கவில்லை. இதனால் பெட்டிக்குள் சிக்கிய இரண்டு குழந்தைகளும் அப்படியே மயங்கிவிட்டனர். 

இதையடுத்து, மதியம் ஒரு மணியளவில் வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்பினார் புவனேஸ்வரி. வீட்டில் இரண்டு குழந்தைகளும் இல்லாததால் அவர்களை பல இடங்களில் தேடினார். இறுதியாக மரப்பெட்டியை அவர் பார்த்தபோது, குழந்தைகள் மயங்கிக் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். புவனேஸ்வரியின் கதறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு வந்தனர். மயங்கிக் கிடந்த இரண்டு குழந்தைகளையும் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு, தனுஸ்ரீ இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். சாருலதாவுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் அவர் கண் விழித்தார்.

பலியான சிறுமி

தொடர்ந்து இந்தச் சம்பவம் குறித்து காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்காத திருப்பதி, தனுஸ்ரீயின் சடலத்தை வீட்டுக்கு எடுத்துச் சென்றார். ஆனால், திருவான்மியூர் காவல் நிலையத்துக்கு தனுஸ்ரீ இறந்த தகவல் தெரியவந்தது. உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்ற இன்ஸ்பெக்டர் சிவக்குமார், தனுஸ்ரீயின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``புவனேஸ்வரி வேலைபார்க்கும் வீட்டில், மரப்பெட்டி இருந்துள்ளது. அந்தப் பெட்டி தங்களுக்கு வேண்டாம் என்று வீட்டின் உரிமையாளர் கூறியதும் அதை தன்னுடைய வீட்டுக்கு புவனேஸ்வரி எடுத்துவந்துள்ளார். அந்தப் பெட்டிதான் தனுஸ்ரீயின் உயிரைப் பறித்துள்ளது. இரண்டு குழந்தைகள் விளையாடிய விளையாட்டு விபரீதமாகியுள்ளது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சாருலதாவிடம் என்ன நடந்தது என்று விசாரணை நடத்தவுள்ளோம்" என்றனர்.

இதற்கிடையில் சாருலதாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் கூறுகையில், ``மரப்பெட்டிக்குள் இரண்டு குழந்தைகளும் சுமார் 4 மணி நேரத்துக்கு மேல் மயங்கிய நிலையில் இருந்துள்ளனர். இதனால் ஆக்ஸிஜன் கிடைக்காமல் தனுஸ்ரீ மூச்சுத்திணறி பலியாகிவிட்டார். சாருலதா உயிரோடு பிழைத்தது கடவுளின் கருணை என்றே சொல்ல வேண்டும். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் சாருலதாவுக்கு சிகிச்சை அளித்துவருகிறோம். மருத்துவமனையின் தீவிர கண்காணிப்பில் அவர் இருக்கிறார். அவரின் உயிருக்கு ஆபத்து இல்லை" என்றனர்.

திருவான்மியூரில் மரப்பெட்டியால் இறந்த குழந்தை

திருப்பதியின் வீட்டுக்குச் சென்றபோது சோகத்தில் அவரால் எதுவும் பேச முடியவில்லை. தனுஸ்ரீயின் புகைப்படத்தைக் கையில் வைத்துக்கொண்டு புவனேஸ்வரியும் உறவினர்களும் கதறி அழுதனர். ராயப்பேட்டை பிணவறை முன்பு, தனுஸ்ரீயின் உறவினர்கள் சோகத்தோடு காத்திருந்தனர். தனுஸ்ரீயின் அம்மா புவனேஸ்வரி, `என் செல்லத்தின் உயிரைப் பறிக்கவா, இந்தப் மரப்பெட்டியை வீட்டுக்குக் கொண்டு வந்தேன்' என்று கதறி அழுதார். 

இதுகுறித்து அந்தப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், ``குழந்தைகள் விளையாடிய மரப்பெட்டி 4 அடி உயரம் இருக்கும். 3 அடி வரை அகலம் இருக்கும். இதனால் அந்த இரண்டு குழந்தைகளும் மரப்பெட்டியை திறந்து உள்ளே சென்று விளையாடியுள்ளனர். பெட்டிக்குள் சென்ற குழந்தைகள் நகர்ந்ததால் பெட்டி வெளிப்பக்கமாக மூடிக்கொண்டது. இதனால் பெட்டியை குழந்தைகளால் திறக்க முடியவில்லை" என்றனர் சோகத்துடன். 

குழந்தைகளின் விளையாட்டில் ஒரு குழந்தையை இழந்து தவிக்கும் திருப்பதிக்கும் புவனேஸ்வரிக்கும் ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. இந்தச் சம்பவம் திருவான்மியூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.