`முதலில் நட்பாகப் பழகுவார்; அடுத்து கைவரிசை காட்டுவார்!'- பெண்களை ஏமாற்றிய டிராவல்ஸ் டிரைவர் | Cuddalore Neyveli fraud man arrested

வெளியிடப்பட்ட நேரம்: 14:10 (04/05/2019)

கடைசி தொடர்பு:14:31 (04/05/2019)

`முதலில் நட்பாகப் பழகுவார்; அடுத்து கைவரிசை காட்டுவார்!'- பெண்களை ஏமாற்றிய டிராவல்ஸ் டிரைவர்

நெய்வேலி டவுன் ஷிப்பில் கோயில் பிரசாதம் கொடுத்து பெண்களிடம் ரூ.20 லட்சத்திற்கு மேல் பணம், நகை மோசடியில் ஈடுபட்ட டிராவல்ஸ் டிரைவரை போலீஸார் கைது செய்தனர்.

பெண்களை ஏமாற்றிய டிராவல்ஸ் டிரைவர் செந்தில்குமார்

நெய்வேலி டவுன் ஷிப், முருகன் கோயில் தெருவைச் சேர்ந்த தங்கராசு மகன் செந்தில்குமார் (39). இவர் நெய்வேலியில் உள்ள டிராவல்ஸ் நிறுவனத்தில் டிரைவராகப் பணிபுரிந்து வருகிறார். ஓய்வு நேரத்தில் நெய்வேலியில் உள்ள சாய்பாபா கோயிலுக்குச் சென்று அங்கு இருக்கும் நிர்வாகிகளுக்கு உதவிகள் செய்து வருவது வழக்கம். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு உதவிகள் செய்து வருவதும், கோயில் பிரசாதங்களை பக்தர்களின் வீட்டிற்கே சென்று கொடுத்தும் வந்துள்ளார். இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு நன்கு அறிமுகமாகியுள்ளார். குறிப்பாகப் பெண் பக்தர்களிடம் கனிவாகவும், நட்புடனும் பழகி வந்துள்ளார்.

இதை செந்தில்குமார் நன்கு பயன்படுத்தி என்.எல்.சி. அதிகாரிகளின் மனைவிகள் மற்றும் இளம்பெண்களைத் தனது சாதுரிய பேச்சால் ஏமாற்றி பணம், நகைகளைப் பறித்துள்ளதாக போலீஸாருக்கு தகவல் வந்துள்ளது. இந்நிலையில் நெய்வேலியைச் சேர்ந்த பெண் ஒருவர் மற்றும் இவரிடம் காரை கொடுத்து ஏமாந்த வெங்கடேசன் ஆகியோர் நெய்வேலி தர்மல் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதில், என்.எல்.சி. நிறுவனத்தில் வேலை பார்க்கும் அதிகாரிகளின் மனைவி மற்றும் இளம் பெண்களை குறிவைத்து செந்தில்குமார் வசூல் வேட்டை நடத்தியுள்ளது தெரியவந்துள்ளது. நெய்வேலி டவுன் ஷிப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய முதல் கட்ட விசாரணையில் பல பெண்களிடம் நட்பாகப் பழகி இதுவரை 20 லட்சத்திற்கும் மேல் பணம், நகைகளை ஏமாற்றியுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் 50க்கும் மேற்பட்டவர்களுடன்  இவர் மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.