52 வகை... 3௦௦ நாய்கள்...! - ஊட்டியில் நடந்த நாய் கண்காட்சி | Dog show held in Ooty

வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (04/05/2019)

கடைசி தொடர்பு:19:20 (04/05/2019)

52 வகை... 3௦௦ நாய்கள்...! - ஊட்டியில் நடந்த நாய் கண்காட்சி

நாய்கள்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில், ஒவ்வோர் ஆண்டும் கோடை சீசன் சமயத்தில், சவுத் ஆஃப் இந்தியா கேனல் கிளப் சார்பில், நாய் கண்காட்சி மற்றும் போட்டிகள் நடத்தப்பட்டுவருகிறது. இந்த ஆண்டுக்கான 128, 129-வது நாய்கள் கண்காட்சி மற்றும் போட்டிகள், நேற்று ஊட்டி அரசு கலைக் கல்லூரி  மைதானத்தில் தொடங்கியது.

ஊட்டி நடந்த நாய்கள் கண்காட்சி

கொல்கத்தா, பஞ்சாப், டெல்லி, மும்பை, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா உட்பட இந்தியா முழுவதிலுமிருந்து, நாய் வளர்ப்போர் தங்களின் நாய்களைப் போட்டிகளுக்கு அழைத்துவந்தனர். தமிழகத்தைச் சேர்ந்த ராஜபாளையம், கோம்பை, சிப்பிப்பாறை நாய்களும் பங்கேற்றுள்ளன.  ஜொ்மன் செப்பா்டு, டாபா்மேன், ராட்வீலா், கோல்டன் ரீட்ரீவர், சைபீரியன்ஆஸ்கி, பீகில், பெல்ஜியம் செப்பர்டு, சிட்சூ உள்ளிட்ட 52 வகையான 300-க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்றுள்ளன. மேலும், இந்த முறை  அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டேக்போர்டு டெரியர், பிஷான் பிரைஸ் ரக நாய்களும் கலந்துகொண்டுள்ளன.

நாய்

முதல் நாளான நேற்று, கோல்டன் ரீட்ரீவர்ஸ், ஜெர்மன் செப்பர்டு ஸ்பெஷல் ஷோ பிரிவில் கீழ்ப்படிதல், அணிவகுப்பு ஆகிய போட்டிகள் நடைபெற்றது. இதில் பெங்களூரு, சென்னை மற்றும் ஊட்டி காவல் துறை நாய்கள் என 38 நாய்கள் கலந்துகொண்டன. தொடர்ந்து இன்றும் நாளையும் அனைத்து ரக நாய்கள் பங்கேற்கும் கண்காட்சி மற்றும் அணிவகுப்பு, அவற்றின் திறமைகள்குறித்த போட்டிகள் நடைபெறுகிறது.

கண்காட்சியில் வலம் வந்த நாய்

வெற்றிபெறும் நாய்களுக்குக் கேடயங்கள், கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன. இக்கண்காட்சியில், நாய்களின் திறமைகளை மதிப்பிட பிலிப்பைன்ஸ் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து  நடுவர்கள் பங்கேற்றுள்ளனர். 26 இந்திய ரக நாய்கள் பங்கேற்றன.