`20 நிமிட சிசிடிவி காட்சிகள்!'- எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா விடுதலையானது எப்படி? | Writer Francis kiruba acquitted from murder case

வெளியிடப்பட்ட நேரம்: 18:01 (06/05/2019)

கடைசி தொடர்பு:18:21 (06/05/2019)

`20 நிமிட சிசிடிவி காட்சிகள்!'- எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா விடுதலையானது எப்படி?

  எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா

கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் அடையாளம் தெரியாத ஒருவர் இறந்தார். அவரின் அருகில் எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா அமர்ந்திருந்ததால் அவர் மீது தேவையில்லாத குற்றச்சாட்டு எழுந்தது. தற்போது அந்த வீண் பழியிலிருந்து எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா தப்பிக்க சிசிடிவி கேமரா காட்சிகளும் இறந்தவரின் பிரேத பரிசோதனை அறிக்கையும் காரணமாக அமைந்துள்ளது. 

கோயம்பேடு மார்க்கெட் பிளாக் நம்பர் 11ல் ஒருவரின் சடலத்தின் அருகே இன்னொருவர் அமர்ந்திருந்தார். அவரைப் பார்க்க தாடியும், பரட்டைத் தலையுமாக இருந்தார். இதனால் இறந்துகிடந்தவரை அருகில் அமர்ந்திருந்தவர்தான் கொலை செய்திருக்க வேண்டும் என்று போலீஸார் முதலில் நம்பினர். 

காவல் நிலையத்தில் நடந்த விசாரணையில் அருகில் அமர்ந்திருந்தவர் பிரபல எழுத்தாளரும் கவிஞருமான பிரான்சிஸ் கிருபா என்று தெரியவந்தது. இதையடுத்து, பிரான்சிஸ் கிருபாவிடம் போலீஸார், இறந்தவர் யார் என விசாரணை நடத்தினர். அப்போது அவர், `நான் யாரையும் கொலை செய்யவில்லை. நான் அந்தப் பகுதியில் சென்றபோது ஒருவர் வலிப்பு நோயால் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். அவருக்கு யாரும் உதவி செய்ய முன்வரவில்லை. எல்லோரும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். நான்தான் அவரின் அருகில் சென்றேன். அதன்பிறகு அந்தப் பகுதியில் கிடந்த இரும்புக் கம்பி ஒன்றை அந்த நபரின் கையில் கொடுத்தேன். அதை வாங்கிய அவரின் உடல் நடுக்கத்திலிருந்து அமைதியானது. அதோடு அவரின் மூச்சும் நின்றுபோனது'' என்று விரிவாக போலீஸாரிடம் பிரான்சிஸ் கிருபா தெரிவித்தார். 

 எழுத்தாளர் பிரான்சிஸ்

பிரான்சிஸ் கிருபா இவ்வாறு போலீஸில் வாக்குமூலம் கொடுத்தாலும் அவரின் மீதான சந்தேகப்பார்வை விலகவில்லை. இதனால், பிரான்சிஸ் கிருபாவை காவல் நிலையத்திலேயே போலீஸார் வைத்திருந்தனர். இந்தத் தகவலை கேள்விபட்டதும் அவரின் நண்பர்கள் அங்கு வந்தனர். இதற்கிடையில் எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா கொலை செய்ததாக தகவல் பரவியது. இது தமிழ்வாசகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதுகுறித்து விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் தீபக்குமாரிடம் காலையில் கேட்டபோது, ``பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கிறோம். அதுவந்தவுடன்தான் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க முடியும்'' என்று கூறினார். இந்தநிலையில் கோயம்பேடு மார்க்கெட்டில் இறந்தவரின் பிரேதபரிசோதனையின் அறிக்கை இன்று மாலை வெளியானது. இதுகுறித்து இன்ஸ்பெக்டர் தீபக்குமாரிடம் கேட்டதற்கு, ``ஹார்ட் அட்டாக்கில் அவர் இறந்துள்ளார். மேலும், அந்தப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தோம். அதில் இறந்தவரின் அருகில் பிரான்சிஸ் கிருபா நிற்கும் காட்சிகளும் உள்ளன. அதோடு அவர் இறந்தவரின் கையில் இரும்புக் கம்பியைக் கொடுக்கும் காட்சிகளும் இடம்பிடித்திருந்தன. அதன்அடிப்படையில்தான் எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபாவை விடுதலை செய்துள்ளோம். இறந்தவர் யார் என்று விசாரித்துவருகிறோம்" என்றார். 

போலீஸாரிடம் கேட்டதற்கு, ``முதலில் அவர் எழுத்தாளர் என்று எங்களுக்குத் தெரியாது. அவரைப் பார்ப்பதற்கு வேறுவிதமாக தோன்றியது. இதனால்தான் அவரின் மீது எங்களுக்கு சந்தேகம் வலுத்தது. இறந்தவருக்கு இதயத்தில் பிரச்னை இருந்துள்ளது. சம்பவத்தன்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அதைப்பார்த்த எழுத்தாளர் காப்பாற்ற முயற்சி செய்துள்ளார். அதுதான் அவருக்கு தேவையில்லாத சிக்கலை ஏற்படுத்திவிட்டது. மேலும் சிசிடிவியில் அடையாளம் தெரியாத அந்த நபருக்கு எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா உதவி செய்யும் காட்சிகள் 20 நிமிடங்கள் பதிவாகியுள்ளன. அதை ஆய்வு செய்தபிறகே உண்மை எங்களுக்குத் தெரியவந்தது" என்றனர்.

இதற்கிடையில், இன்று மாலை எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபாவை அவரின் நண்பர்கள் காவல் நிலையத்திலிருந்து அழைத்துச் சென்றனர். அப்போது, அவர், போலீஸாருக்கு நன்றி தெரிவித்துள்ளார். எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா விடுதலை செய்யப்பட்ட தகவலைக் கேட்டு அவருக்கு வேண்டப்பட்டவர்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.