`பாதாள அறையுமில்லை; பணமுமில்லை; மொத்தமே ரூ.98,820தான் பறிமுதல்!' - ரெய்டு குறித்து மார்ட்டின் மனைவி லீமா ரோஸ் | Martin's wife Leema rose speaks about IT raid

வெளியிடப்பட்ட நேரம்: 21:21 (06/05/2019)

கடைசி தொடர்பு:21:21 (06/05/2019)

`பாதாள அறையுமில்லை; பணமுமில்லை; மொத்தமே ரூ.98,820தான் பறிமுதல்!' - ரெய்டு குறித்து மார்ட்டின் மனைவி லீமா ரோஸ்

கோவை லாட்டரி மார்ட்டின் வீட்டில் மொத்தமாகவே ரூ.98,820 தான் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று லீமா ரோஸ் விளக்கம் அளித்துள்ளார்.

மார்ட்டின் வீடு

கோவையைச் சேர்ந்த லாட்டரி தொழிலதிபர் மார்ட்டின் சம்பந்தப்பட்ட இடங்களில் கடந்த வாரம் முதல் வருமானவரித்துறையினர் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக மார்ட்டின் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களிடமும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதனிடையே, மார்ட்டின் நிறுவனத்தில் காசாளராக பணியாற்றி வந்த பழனிச்சாமி என்பவரது சடலம் வெள்ளியங்காடு குட்டையில் இருந்து மீட்கப்பட்டது. வருமானவரித்துறையினர் மற்றும் மார்ட்டின் குழுமத்தினரால்தான், பழனிச்சாமி உயிரிழந்ததாக அவரின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனிடையே, நாடு முழுவதும் மார்ட்டின் சம்பந்தப்பட்ட 70  இடங்களில் நடத்தப்பட்ட ரெய்டில் கணக்கில் வாரத பல நூறு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. குறிப்பாக, கோவை வெள்ளக்கிணறு பகுதியில் உள்ள மார்ட்டின் இல்லத்தில் கட்டுக் கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானது. மேலும், மார்ட்டின் வீடு, பாதாள அறை எங்கும் கட்டுக் கட்டாக பணம் இருப்பதாக கூறப்பட்டது.

லீமா ரோஸ்

இதுகுறித்து, மார்ட்டின் மனைவி லீமா ரோஸ் அளித்துள்ள விளக்கத்தில், ``மார்ட்டின் வீட்டில் இருந்து கட்டுக் கட்டாக கோடிக்கணக்கான பணம் எடுக்கப்பட்டதாக போட்டோ மற்றும் வீடியோ பரவி வருகிறது. அது போலியானது. அதற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மார்ட்டின் வீட்டில் பாதாள அறை எல்லாம் இல்லை. கட்டிலுக்கு அடியில் பணமும் இல்லை. வருமானவரித்துறையினர் மொத்தமாகவே எங்களது வீட்டில் இருந்து ரூ.98,820 தான் பறிமுதல் செய்தனர். இதற்கான கைப்பற்றுதல் படிவத்தை, வருமானவரித்துறையின் உதவி இயக்குநரே, கையொப்பமிட்டு, முத்திரையிட்டு கொடுத்துள்ளார்" என்று கூறியுள்ளார்.