தண்ணீர் பிடிப்பதில் தொடங்கிய வாக்குவாதம், மோதலானது! - சாலை மறியலால் திருப்பூரில் பரபரப்பு! | One group of people protest on road for action

வெளியிடப்பட்ட நேரம்: 10:56 (07/05/2019)

கடைசி தொடர்பு:13:02 (07/05/2019)

தண்ணீர் பிடிப்பதில் தொடங்கிய வாக்குவாதம், மோதலானது! - சாலை மறியலால் திருப்பூரில் பரபரப்பு!

குழாயில் தண்ணீர் பிடிப்பதில் இரு பிரிவைச் சேர்ந்த நபர்களிடையே மோதல் ஏற்பட்டதில், ஒரு பிரிவைச் சேர்ந்தவர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தண்ணீர்

திருப்பூர் மாவட்டம் சூரிபாளையம் பகுதியில் வசித்து வருபவர் விசைத்தறி தொழிலாளி விஜயகுமார். இவருக்கு பத்மாவதி என்ற மனைவியும், மூன்று குழந்தைகளும் உள்ளனர். இந்தநிலையில் கடந்த மே 3 - ம் தேதி பத்மாவதி தனது வீட்டருகே உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிக்கச் சென்றிருக்கிறார். அப்போது அதேபகுதியைச் சேர்ந்த துளசிமணி மற்றும் அவரது உறவினர் ஜெயமணி ஆகியோருடன் பத்மாவதிக்கு தண்ணீர் பிடிப்பதில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இரு தரப்பு உறவுகளும் பேசி வாக்குவாதத்தை முடித்து வைத்துள்ளனர்.

இந்நிலையில் அன்றைய தினம் மாலை வீட்டிலிருந்து கிளம்பி வெளியே சென்ற விஜயகுமாரை, துளசிமணியின் மகன் மற்றும் அவரது உறவினர்கள் சேர்ந்து சாதியின் பெயரைச் சொல்லி திட்டி தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் விஜயகுமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் தன்னை சாதியின் பெயரைச் சொல்லி திட்டியதோடு, பாலியல் துன்புறுத்தலுக்கு அவர்கள் ஆளாக்கியதாகவும் அவிநாசி காவல் நிலையத்தில் புகார் அளித்தார் விஜயகுமாரின் மனைவி பத்மாவதி.

இதுதொடர்பாக அவிநாசி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சம்பந்தப்பட்டவர்கள்மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக்கூறி பத்மாவதி, அவரது உறவினர்கள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் அவிநாசி காவல் நிலையம் முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கொச்சின் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.