`ஸ்டாலினோடு சேர்ந்து ஆட்சியைக் கவிழ்ப்பாரா தினகரன்?!' - எடப்பாடி பழனிசாமி கொடுத்த புது விளக்கம் | Edappadi palanisamy anger over stalin, dinakaran activities

வெளியிடப்பட்ட நேரம்: 13:47 (07/05/2019)

கடைசி தொடர்பு:15:58 (08/05/2019)

`ஸ்டாலினோடு சேர்ந்து ஆட்சியைக் கவிழ்ப்பாரா தினகரன்?!' - எடப்பாடி பழனிசாமி கொடுத்த புது விளக்கம்

ஆட்சி நீடிப்பதற்குப் போதுமான சட்டமன்றத் தொகுதிகளில் நாம் வெற்றி பெறுவோம். இந்தத் தேர்தலில் ஓரளவுக்குத்தான் தினகரனால் நம்மை பலவீனப்படுத்த முடியும். அடுத்த தேர்தலில் அவர் யாரோ, நாம் யாரோ என்ற அளவுக்குத்தான் சூழல் இருக்கும்.

`ஸ்டாலினோடு சேர்ந்து ஆட்சியைக் கவிழ்ப்பாரா தினகரன்?!'  - எடப்பாடி பழனிசாமி கொடுத்த புது விளக்கம்

`தி.மு.க-வுடன் இணைந்து ஆட்சியைக் கவிழ்ப்போம்' எனப் பேசியிருக்கிறார் அ.ம.மு.க கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்க.தமிழ்ச்செல்வன். `தினகரனை நாம் சீரியஸாகப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. அரசியல் சூழல்கள் நமக்குச் சாதகமாக இருக்கின்றன. எப்படிப்பட்ட சூழல்கள் வந்தாலும் இந்த ஆட்சியைக் காப்பாற்றிக் காட்டுகிறேன்' எனப் பேசியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. 

எடப்பாடி பழனிசாமி

தமிழக சட்டமன்ற சபாநாயகர் தனபாலிடம் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 3 பேர் தொடர்பான சில ஆவணங்களைக் கொடுத்திருந்திருந்தார் அரசு கொறடா ராஜேந்திரன். தேர்தலில் தினகரனுடன் இணைந்து அ.தி.மு.க வேட்பாளர்களுக்கு எதிராகச் செயல்பட்டனர்' என்பதுதான் கொறடா முன்வைத்த குற்றச்சாட்டு. `3 பேர் மீது நடவடிக்கை எடுப்பதன் மூலம் ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள முயல்கிறார் எடப்பாடி பழனிசாமி' எனத் தி.மு.க தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கான மனுவை சட்டசபைச் செயலரிடம் கொடுத்தது தி.மு.க. இந்நிலையில், சபாநாயகரின் உத்தரவுக்குத் தடை விதிக்கக் கோரி எம்.எல்.ஏக்கள் ரத்தின சபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் சபாநாயகரின் உத்தரவுக்குத் தடை விதித்துத் தீர்ப்பளித்தது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அமர்வு. இந்த வழக்கில் தன்னை இணைத்துக் கொள்ளாத கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு, விளக்கமளிக்க மேலும் ஒரு வாரக் கால அவகாசம் அளிக்க வேண்டும் எனச் சட்டசபைச் செயலரிடம் மனு கொடுத்தார். தடை உத்தரவு 3 பேருக்கும் பொருந்தும் என்பதால் விளக்கம் அளிக்கத் தேவையில்லை எனச் சட்டமன்றச் செயலகம் பதில் கொடுத்துள்ளது. 

ரத்தின சபாபதி, கலைச்செல்வன்

நாடாளுமன்றம் மற்றும் 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் இரண்டு வாரக் கால அவகாசமே உள்ள நிலையில், ஆட்சி மாறும் என்ற வாதத்தைத் தேர்தல் பிரசாரத்தில் முன்வைத்துப் பேசி வருகிறார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். இதே கருத்தை முன்வைத்த துரைமுருகனும், `ஸ்டாலின் 50 ஆண்டுகள் ஆட்சி புரிவார். 37  நாடாளுமன்றத்  தொகுதிகளை நாம் வெல்வோம். ஒன்று அல்லது இரண்டு தொகுதிகளில்தான் அ.தி.மு.க வெற்றி பெறும். சட்டமன்றத் தேர்தலில் குறைந்தது 5 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால்தான் ஆட்சி நீடிக்கும் என்பதால் 3 எம்.எல்.ஏக்களை களை எடுக்கும் காரியத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் இன்னும் 3 வாரத்தில் ஆட்சி மாற்றம் உறுதி. ஸ்டாலின் முதல்வராக அமர்வார்' எனப் பேசினார். இதே கருத்தை முன்வைத்துப் பேசிய தங்க.தமிழ்ச்செல்வனும், `மே 23-ம் தேதிக்குப் பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி. தி.மு.க-வோடு சேர்ந்து இந்த ஆட்சியைக் கவிழ்ப்போம்' என வெளிப்படையாகப் பேசியிருக்கிறார் தங்க.தமிழ்ச்செல்வன். 

தினகரன்

``வாக்கு எண்ணிக்கை நாள் நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில் ஆட்சி மாற்றம் உறுதி என எதிர்க்கட்சிகள் பேசுவதை எல்லாம் எடப்பாடி பழனிசாமி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை" என விவரித்த அ.தி.மு.க முன்னணி நிர்வாகிகள் சிலர், `` எடப்பாடி அரசைக் கவிழ்த்துவிட்டு முதல்வர் பதவியில் அமர்ந்துவிட வேண்டும் என்ற முனைப்பில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் ஸ்டாலின். தினகரனும் அவரது கட்சி நிர்வாகிகளும், தி.மு.க எம்.எல்.ஏக்கள் துணையோடு எடப்பாடி அரசை மாற்ற வேண்டும் எனப் போராடி வருகின்றனர். இதை முதல்வர் தரப்பில் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. நேற்று தன்னைச் சந்திக்க வந்த முக்கியப் பிரமுகர்களிடம் பேசிய முதல்வர், ``அரசுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. இந்தத் தேர்தலில் தினகரன் அதிகபட்சமாக பத்து சதவிகித வாக்குகளை வாங்குவார். அதைவைத்துக் கொண்டு அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. நமது ஆட்சிக்குத் தலித் மக்கள் மத்தியிலும் சிறுபான்மை மக்கள் மத்தியிலும் எதிர்ப்பு இருந்தது. இந்தத் தேர்தலில் 21 சதவிகித வாக்குகளைத் தாராளமாக வாங்கிவிடுவோம். அடுத்து வரக் கூடிய தேர்தலில் தலித், சிறுபான்மை எதிர்ப்புகள் எதுவும் நமக்கு இருக்காது. அடுத்த தேர்தலில் 30 சதவிகித வாக்குகளைப் பெற்று பழைய அண்ணா தி.மு.க என்ற நிலைக்கு நாம் வந்துவிடுவோம். 

ஸ்டாலின்

தினகரன் நமக்குப் போட்டியாளர் அல்ல. ஆட்சி நீடிப்பதற்குப் போதுமான சட்டமன்றத் தொகுதிகளில் நாம் வெற்றி பெறுவோம். இந்தத் தேர்தலில் ஓரளவுக்குத்தான் அவரால் நம்மைப் பலவீனப்படுத்த முடியும். அடுத்த தேர்தலில் அவர் யாரோ, நாம் யாரோ என்ற அளவுக்குத்தான் சூழல் இருக்கும். அடுத்த ரவுண்டில் தலித் வாக்குகளையும் கிறிஸ்துவ, முஸ்லிம் வாக்குகளையும் நமது பக்கம் உறுதியாகக் கொண்டு வருவோம். இந்தமுறை மோடி எதிர்ப்பு என்ற அடிப்படையில் தினகரனுக்குக் கொஞ்சம் வாக்குகள் வந்து சேரும். அடுத்த தேர்தலில் இதைவிடப் பாதி வாக்குகளைத்தான் அவர் வாங்குவார். அவரை நாம் சீரியஸாகப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. அரசியல் சூழல்கள் நமக்குச் சாதகமாக இருக்கின்றன. எப்படிப்பட்ட சூழல்கள் வந்தாலும் இந்த ஆட்சியைக் காப்பாற்றிக் காட்டுகிறேன்' என்றவர், 

`மோடியுடன் கூட்டணி வைக்காமல் இருந்திருந்தால் அவரது பகையைச் சம்பாதிக்க வேண்டியது வந்திருக்கும். அவரைப் பகைத்துக் கொண்டால் எவ்வளவு பெரிய முதலமைச்சராக இருந்தாலும் தாக்குப்பிடிக்க முடியாது. இதை நாம் கண்கூடாகப் பார்த்து வருகிறோம். மோடியைப் பகைக்காமல் இருந்தாலும் 5 சீட்டுகளைத்தான் பா.ஜ.க-வுக்குக் கொடுத்தோம். நாளைக்கு எப்படிச் சூழல்கள் அமைகிறதோ, அதற்கேற்ப நம்மை நிலைநிறுத்திக் கொள்வோம். அடுத்த தேர்தலில் என்னை முதலமைச்சராக முன்னிறுத்தியே அ.தி.மு.க தொண்டர்கள் வாக்கு கேட்பார்கள். அதில் எந்தவித மாற்றமும் இல்லை' எனப் பேசினார். அவரது கருத்தை நிர்வாகிகளும் ஏற்றுக் கொண்டனர்" என்றார் விரிவாக. 

தினகரன்

தங்க.தமிழ்ச்செல்வன் பேச்சு குறித்து நம்மிடம் பேசிய அரசியல் ஆய்வாளர் ரவீந்திரன் துரைசாமி, ``தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி அல்லது தேர்தல் என்பதாகத்தான் சூழல்கள் அமையும். ஸ்டாலினும் தினகரனும் ஒன்றிணைந்து எடப்பாடியைக் கவிழ்ப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. ஸ்டாலின் தலைமையை தினகரன் ஏற்க மாட்டார். தினகரனும், ஸ்டாலினை முதல்வராக ஏற்றுக் கொள்ள மாட்டார். இந்தச் சூழலில் மாற்று அரசு அமைக்க வேண்டும் என்றால், காங்கிரஸ் உட்பட கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சர் பதவிகளை அள்ளித் தர வேண்டும். டெல்லியில் ஸ்டாலினுக்கு வேண்டியவர் பிரதமராக வர வேண்டும். எடப்பாடி அரசை வீழ்த்துவதற்குப் சில தடைகள் இருக்கின்றன. எப்படியிருப்பினும், எடப்பாடி பழனிசாமியா...தேர்தலா என்பதற்கான விடை, வாக்கு எண்ணிக்கை நாளில் தெரிந்துவிடும்" என்றார் நிதானமாக.