மாற்றத்துக்குத் தயாராகும் தமிழ் மாநில காங்கிரஸ் - ஜி.கே.வாசனின் புதிய திட்டம்! | G.K. Vasan's party Tamil manila congress is getting ready for change

வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (07/05/2019)

கடைசி தொடர்பு:15:20 (07/05/2019)

மாற்றத்துக்குத் தயாராகும் தமிழ் மாநில காங்கிரஸ் - ஜி.கே.வாசனின் புதிய திட்டம்!

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் பல  மாற்றங்களைக் கொண்டுவர திட்டமிட்டிருக்கிறார், அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன்.

தமிழ் மாநில காங்கிரஸ் வாசன்

தமிழகத்தில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் இடம்பிடித்ததில் இருந்தே, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் ஜி.கே.வாசன் மீது அதிருப்தியில் இருந்தனர். ''தாய்க் கட்சியான காங்கிரஸில் இருந்து பிரிந்துவந்தாலும், பா.ஜ.க-வுடன் கூட்டணி வைக்கலாமா...'' என்ற கேள்வியை வாசனிடமே கேட்டிருக்கிறார்கள் சில கட்சி நிர்வாகிகள். இந்நிலையில்தான், அ.தி.மு.க கூட்டணியில் ஒரு தொகுதி பெற்று, ஆட்டோ சின்னத்தில் தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதியில் களம்கண்டது த.மா.கா. தஞ்சைத் தொகுதி முழுதும் ஆட்டோ சின்னத்துக்காக பிரசாரம் செய்தாலும், கூட்டணிக் கட்சிகளுக்கு தமிழகமெங்கும் பிரசாரம் செய்தார் வாசன். தற்போது இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நான்கு தொகுதிகளிலும் ஆளும் கட்சியான அ.தி.மு.க-வை ஆதரித்து பிரசாரம் செய்துவருகிறார்.


இந்நிலையில், கட்சியை வலுப்படுத்த சில மாற்றத்துக்குத் தயாராகிவருகிறார் வாசன். அதனால், மாநில நிர்வாகிகள் பலரை மாவட்ட பார்வையாளர்களாக நியமித்து, பூத் அளவில் இருந்து கட்சியை வலுப்படுத்தத் திட்டமிட்டுள்ளார். அதேபோல் வருவாய் மாவட்ட அடிப்படையில் மாவட்டத் தலைவர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். விரைவில் இளைஞரணி மற்றும் மகளிரணியிலும் மிகப்பெரிய  மாற்றங்களைக் கொண்டுவர இருக்கிறார் வாசன். கட்சித்தொண்டர்கள் பலர் கொடுத்த புகாரின் அடிப்படையில், உயர்மட்டக்குழுவில் இருக்கும் சில தலைவர்களும் மாற்றப்படலாம் எனத் தெரியவருகிறது.